Friday, November 27, 2015

கவிதை பாடும் கார்த்திகை

பிறந்த நாளில் எரியும் மெழுகை
ஊதி அனைக்க தெம்பில்லாத
சிறு வயது குழந்தைப்போல்

ஏற்றி வைத்த அகல் விளக்குகளை
அனைக்க தெம்பில்லாத
மெல்லிய கார்த்திகை தென்றல்.

போதுமானதாய் இருக்கிறது
மனசு சில்லிட.

----000------000-----000-----


பித்தளை முதல் தங்கமென
எத்தனை விளக்கிருந்தாலும்
அத்தனையும் தரும் ஒளி
அகலும் தரும், இருள்
அகளும் வரம்.

உருவம் தவிர்த்து
மெய்யொளி காண
ஒளிரட்டும் நல் கார்த்திகை.

----000-----000------000-----

அணையும் தீபமேற்ற மனதின்றி
அகல் ஒவ்வொன்றிலும்
மலர் வைத்து செல்கிறாய் நீ.

எதைக் கொண்டு
நிரப்பினாலும்
நிரம்பும் மனசு.

----000-----000-----000----

ஏற்றிய தீபமெல்லாம்
உறங்கும் விழிகள்.

உறக்கம் கலைப்பதை
பொறுக்காத தாய்மனம்
முறைத்து பார்க்கிறது
கார்த்திகை காற்றை.

---000---000---000----

வாட்ஸாப் உலகம்

வாட்ஸாப்பில் (விரும்பி) நேரம் செலவிடும் நம்மால், நிகழ் உலகில் (அதே விருப்பத்துடன்) நேரம் செலவிட முடிவதில்லை.. ஏன்?

சென்ற வாரம் ராஜா சாரின் கவித்துவமான கேள்வியின் சாராம்சம் தான் மேலே உள்ள கேள்வி. என்னை நானே கேட்டுக்கொண்டதில், எனக்கு கிடைத்த பதில் இது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நான் அதிகம் வாட்ஸாப்பில் உலவ இது தான் காரணமென நினைக்கிறேன்.

காரணங்கள்--- இதோ.

நமக்கு பிடித்தவர்களையும், நம்மை பிடித்தவர்களையும் மட்டும் கொண்டு, நாம் கட்டிவைத்த ஒரு மாயக்கூடு தான் வாட்ஸாப். தொடுதிரையும், இனையமும் வாழ்க்கையில் கலந்து, புற உலகிலிருந்து விடுப்பட்டு, டெக்னாலஜியின் மாய உலகில், வாழ பழக்கமில்லாத, கைப்பேசி பரிச்சியமில்லாத, சில குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் தவிர, மற்ற அனைவரும் சேர்ந்து வாழும் கற்பனை குடும்பம் இது. விருப்பமானவர்களோடு, விரும்பிய கனத்தில், உரையாட உருவாக்கிய உன்னத மெல்லியல் இது. சமூகத்தாலும், புவியியலாலும் ஒன்று சேர இயலாத, நமக்கு பிடித்தாமனாவர்களைக் கொண்டு, நாமே கட்டிக்கொள்ள முடிந்த மனவீடு தானே இந்த வாட்ஸாப் குழுமங்கள்.

நம் பல பரினாமங்களில், ஒவ்வொன்றாய் கலந்து, நம்மை கொண்டு, நாமே செய்த நம் க்ளோனிங்குகளை, ஒவ்வொரு குழுவின் வடிவத்திற்கு ஏற்றார் போல், நம்மை நாமே வடித்து ஊற்றும், எழுத்துவகையான நாம் தானே இந்த வாட்ஸாப்பில் உரையாடும் நம் எழுத்துக்கள்.

இரண்டு காதுகளை மட்டுமே இறைவன் படைக்க, இருக்கின்ற கைப்பெசிகளில் எல்லாம் ஒவ்வொரு காதாக இறைந்து கிடக்கும் வல்லமை கொடுத்த தொழில்நுட்பம் வாட்ஸாப். நம் ஒவ்வொரு கைபேசியிலும் இருப்பது, நம் உறவுகளின், நட்புகளின் ஒவ்வொரு க்ளோனிங் அல்லவா?

அவரவர்க்கு ஒரு உலகம், அதில் அவரவருக்கு பிடித்தவர்களை, இட்டு நிரப்பிக்கொள்ள கற்பனை உலக குழுக்கள். அந்த கற்பனை உலகத்தில், நம் கற்பனைக்கு தகுந்தாற் போல் இல்லாமல், பிற நண்பர்களையும், உறவுகளையும், அவர்களுக்கு பிடித்த அவர்களாகவே பேசி, பழக வைத்த, கற்பனையும், நிஜமும் கலந்து செய்த கலவை உலகம் அல்லவா வாட்ஸாப்.

வெவ்வேறு நேரங்களில் இருந்தாலும், பேசுபவர்களையும், கேட்ப்பவர்களையும், அவரவர் விருப்பப்பட்ட நேரத்தில், பேசிக்கொள்ளவும், கேட்டுக்கொள்ளவும் என நேரம், தூரம் கடந்த, பகிர்தலின் உச்சக்கட்டம் தானே இந்த வாட்ஸாப்.

நாம் கடந்து வந்த ஒவ்வொரு கால கட்டத்தினையும், அதே கால கட்டத்தில் நிறுத்தி வைத்து,  நம்மையும், நமக்கு வேண்டியவர்களையும் அதே காலத்திற்கு கடத்தி சென்று, நேற்றையும் இன்றையும் கலந்து வைத்த விசித்திர உலகம் தானே வாட்ஸாப்.

இந்த உலகத்தில் பேச, எழுத, மனதை தவிர வேறு சட்ட திட்டங்கள் இல்லை. அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பது தானே உண்மையான நாம்.

இதில் யாரோடு பகிர்கிறோம் என்பதும், யார்யாரிடம் எல்லாம் நாம் உண்மையில் பகிர நினைத்தோம் என்பதும், எதையெதை யார் யாரிடம் பகிர்ந்தோம் என்பதும் நம் விருப்பப்படி அமைவதால், இது தானே நம் பகிர்தல்களின் உண்மையான உரைகல்.

மனதுக்கு பிடித்ததால் 'பிடித்து பினைந்திருப்பவர்களுக்கும்', புற உலகின் கட்டாயங்களால் பினைந்து, 'பினைந்ததால் மட்டுமே பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்' இருக்கும் வேறுபாடுகளை சொல்லும் இன்றைய கைபேசி இதயம் தானே இது.

பட்டாம்பூச்சியை கைக்குள் அடக்கி வைப்பதற்கும், இரு கரம் நீட்டி, விரும்பிய பட்டாம்பூச்சிகள் எல்லாம் வந்து அமர்ந்து கொள்ளட்டும் என்பதற்கும் இருக்கும் அந்த வேறுபாடு தானே,  வாட்ஸாப்பில், தொடர்புகளில் இருக்கும் நம் நண்பர்களுக்கும், தொடர்புகள் இல்லாத நம் உறவுகளுக்கும் உள்ள வேறுபாடு.

அப்படியானால், இதில் தொடர்பு கொள்பவர்கள் தானே உண்மையாக நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்களும் உறவுகளும். மற்றதெல்லாம்... சும்மா சமூகத்திற்காக போடும் வேஷம் தானே.

இனி வாட்ஸாப்பில் அதிக நேரம் இருப்பவர்களை குறைசொல்லாமல், அவர்களின் அந்த உலகத்தில் உறுப்பினராக நம்மால் முடிந்ததை செய்வோம்... உண்மையில் அவர்கள் நமக்கு முக்கியமாகப்பட்டால்.

பெண்மனசு

பெண்மனசு. இந்த சொற்றொடர் யார் மனதில் தான் ஒரு நினைவு பிரளயத்தை ஏற்படுத்தாது.

எழுபது வயதிலும் நினைவில் துரத்தும் கொடுக்கப்படாத முத்தம், அனுமதிக்காத தீண்டல், சொல்ல முடியாத வார்த்தை, காமம், மனம் கனக்கும் ரகசியங்கள், வாழ்வின் முடிவுக்கு தள்ளும் குழப்பங்கள், தாலமுடியாத வலி, ஆற்றாத தாய்மை, கண்ணீரில் கரைத்து, மனதில் புதைத்து வைத்திருக்கும் துக்கமென ஒவ்வொரு பெண்ணும் வந்த வழி, வனங்களையும், மிருகங்களையும் கடந்த பயணம் தானே. அவர்களின் மனதில் இருப்பதை எழுத்தில் வடிப்பதில் சாத்தியகூறுகள் குறைவேயெனினும், ஒரு சோறு பதமாக இருந்தது ராஜூ முருகனின் எழுத்து. நம் மனசு தானே நமக்கு கடவுள். அந்த மனசென்னும் கிரிஷ்ண பரமாத்மாவிற்கு, இந்த ராஜூ முருகனின் ஒரு சோறு ஆற்றிய பசி எல்லாரும் அறிந்ததே. ஒரு அரிசியில் இப்போது உலகையே வரைந்துவிடுகிறார்கள் வல்லுநர்கள். ஒவ்வொரு அரிசியிலும் நம் பேர் இருக்கும் என்பார்கள். ராஜூ முருகனின் இந்த பெண்மனசு என்னும் அரிசியில் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரின் பெயரும் இருக்கிறது. எல்லோருக்கும் ஒவ்வொரு ஞாபக அலையை, வட்ட வட்டமாக எழுப்பிவிட்டு, சலனமில்லாமல் முங்கி போய்விடுகிறது.

தனி குடித்தனம், லிவ்-இன் ரிலேஷன்ஷிப், இண்டிவீடுவல் பேரன்டிங் என தனி தீவாக பெண்கள் வாழ பழகிக் கொண்ட இந்த கால கட்டத்திலும் பெண்மனசு அப்படியே, ரனங்களும், புரையோடிய புண்ணுமாக தான் இருக்கிறதா எனில்...ஆமென்று தான் சொல்ல வேண்டியுள்ளது. வெளிப்பூச்சு மட்டும் பார்த்து, உள்ளுக்குள் உலுத்துப் போன பழைய மரங்களாக, இன்னமும் அவர்கள் மனதில், கரையாண்கள் அறித்த படி தான் இருக்கின்றன. அதிலும் பெரும்பாலும், அவர்களின் நெருங்கிய உறவுகள், நம்பிய நண்பர்கள், கணவன், பிள்ளை என எவரிடமும் சொல்ல இயலாத ரகசியங்கள், மனக் குமறல்கள், தப்பான முடிவுகளுக்கான மண்ணிப்பு, உணர்வு பெருக்கில் கொட்டிய வார்த்தைகள் என இன்னும் இன்னும் மண்டிப்போன தூர் வாராத கிணறுகளாக தான் இருக்கின்றன.

திருச்செங்கோட்டில், ஒரு தனியார் கணினி நிறுவனத்தில், ஆசிரியராக பணிப்புரிந்து கொண்டிருந்த நேரம். மாநகரில் இருந்து, புழுதி படிந்த உள்ளத்தை தூசு தட்டி, அந்த சிற்றூரின் நச்சு கலக்காத காற்றால், மனதை ஆசுவாசப்படுத்தி, ஆர அமர வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த காலம். இதை போன்ற காலங்களில் தான் நமக்கு மனசென்று ஒன்று இருப்பதையும், குறிப்பாக மற்றவர்களுக்கும் அது இருக்கும் என்பதையும் அறிந்து வாழ்வோம். அப்படி வாழ முடிந்த, எந்திர தனமில்லாத வாழ்க்கையில் பூமனம் கொண்டு மணம் வீசினார் ஒரு தோழி. உடன் பணிப்புரிந்த அந்த சகதோழி கணினியில் நல்ல வல்லமை கொண்டிருந்தார். நுனிநாக்கில் ஆங்கிலமும், விரல் நுனியில் கணினி பாடங்களும் என சகலகலாவல்லி.பெரும்பாலான பெண் குழந்தைகளை படிக்க வைப்பதோ, அல்ல கல்லூரிக்கு அனுப்புவதோ அவர்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற எண்ணமும், அப்படி படித்து விட்டால், அவர்கள் ஜாதியில் அதை விட அதிகம் படித்த மாப்பிள்ளை கிடைப்பது கடினமெனவும் நம்பிக் கொண்டிருந்த கால கட்டம். இதனால் முதுகலை படிப்பிற்கு செல்ல பெரும்பாலான பெண்கள் அவர்களின் பெற்றோரிடத்தில் சண்டையிட்டு தான் தங்கள் படிப்பார்வத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்த சண்டைக்கு பின் சமாதனாமாகத அப்பாக்களில் என் தோழியின் அப்பாவும் ஒருவர். அப்பாவிற்கும் மகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய வந்த அம்மாவின் சொல் படி, தொலை தூர கல்வி வழியில் முதுகலையும், அவளின் ஆசைக்கு வேலைக்கும் போக சம்மதம் பெற்றிருந்தார். இருப்பினும் அப்பா மகள் உறவு அதற்கு பின் உமியும் அரிசியுமாக, ஒட்டவே இல்லை.

பர்ஸில் மேக்கப் சாமான்கள் இருப்பதை வேசிகளுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும், பேருந்தில் ஆடவர்களுடன் அமர்ந்து செல்ல நேர்வதை தப்பாக பார்ப்பதும், ஒன்றரை மணி பயணத்திற்கு பின் இரவில் பயமில்லாமல், தனியாக வரும் பெண்ணை தப்பாக யோசிப்பதும் என அவர் அப்பா, அந்த தலைமுறைக்கேற்ற அரசாங்க உத்தியோகிஸ்தர்களின் சந்தேகங்களுடன், அவள் அம்மாவிடம் கோபத்தை காட்டுவதும், இவரிடம் முறைப்பதுமாக இருந்தது. அவளின் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ரணமாகி போனது. அவளோடு படித்த மற்ற கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் வேலை ஏதும் கிடைக்காமல் அவர்கள் வீட்டினிரிடையே தண்டச்சோறு என்று திட்டு வாங்கி கொண்டிருந்த நேரத்தில், தோழி அவராக படித்து, அவராக வேலைக்கும் சேர்ந்து, முதல் சம்பளத்தை அவர் அப்பாவிடம் கொடுத்தார். கால் கடுக்க நின்று, தொண்டை தண்ணி வத்த கஷ்டப்பட்டு, சம்பாதித்து கொடுத்த, முதல் சம்பளத்தை அவள் முகத்தில் வீசியெரிந்த போது அந்த பெண்மனசு என்ன பாடுபட்டிருக்கும் என்று யோசிக்க கூட முடியவில்லை. அவர் அப்பா பல வருடங்களாக உழைத்து அப்போது வாங்கியதை, அந்த தோழி சீக்கிரமே வாங்கிவிட்டார் என்று அவர் அப்பாவிற்கு கோவமா, அல்லது, தன் சொல்லை கேட்காமல் படித்து முடித்து, வேலைக்கும் சென்று விட்டாள் என்ற அங்காலாய்ப்பா, அல்ல அவள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் சம்பாதிக்கும் ஒருவனை தேட வேண்டிய கட்டாயமா,  அல்ல இனி தன் பேச்சிற்கு மதிப்பிருக்காது என்னும் பயமா? எது அவரை அந்த அளவிற்கு கோபப்படுத்தியது என்று தெரியவில்லை.  ஆனால் அதற்கு பின் பல கஷ்டங்கள் அடுக்கிக் கொண்டே போக, அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கிவிட நினைத்தாள் அந்த தோழி.  அவளுக்கு, படிப்பும் வேலையும் தான் சொந்த காலில் நிற்க தைரியம் கொடுக்கும் என உரமூட்டி, அவ்வளவு ரணகளத்திற்கு நடுவிலும் அவளை வேலைப்பார்க்க சொன்னது தான் அப்போதைக்கு நான் செய்த நல்ல காரியம்.!?

நானும் அவரும் பழகுவது கூட அந்த தனியார் நிறுவனத்திற்கும், அதில் பயின்ற மாணவர்களுக்கும், அந்த சிற்றூருக்கும், அவ்வளவு ஏன், என் நண்பர்களுக்குமே கூட கொஞ்சம் தப்பாக தான் தோன்றியிருக்கிறது. இத்தனைக்கும் என் காதலி சென்னையில் இருப்பதும், அவரை வெகு விரைவில் நான் மணக்கப்போவதும் கூட பலருக்கு தெரியும். இருந்தும், மணமாகத, ஆண், பெண் இருவர் பழகுவதை காதலர்களாகவே பார்க்க பழகிவிட்ட கண்கள். அந்த தோழியின் அழகுக்கும், மென்மையான மனதிற்கும், இனிமையான சொற்களிற்கும், விடாப்பிடியான வைராக்கியத்திற்கும் அவள் கல்லூரியில் படிக்கும்போதே சில காதல் விண்ணப்பங்கள் வந்திருந்தன. தன் பெற்றோருக்கு சம்மதமிருக்காது என்ற ஒரே காரணத்திற்காக அப்போதே அவள் மனதினை பூட்டி, சாவியை வீசி எறிந்து விட்டிருந்தாள். அதே ஊரில் முதுகலை பயின்ற மாணவர் ஒருவர், இவருக்காகவே எங்கள் கணினி நிறுவனத்தில் படிக்க சேர்ந்து, என்னிடம் நண்பராகி, அந்த தோழியிடம் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தார். பப்பு வேகவில்லை. மேலும் ஏற்கனவே வீட்டில் புயல் வீசிக்கொண்டிருந்ததால், அங்கே பூக்களை ரசிக்க அந்த தோழிக்கு நேரமில்லை. நண்பர் எவ்வளவு கெஞ்சி கேட்டும், நட்பாக மட்டும் பேசி வந்தார். அந்த சிற்றூரை விடுத்து, கணினி உலகம் அவளை மாநகருக்கு குடிபெயர்த்தது. தனிமை, வீட்டில் புரிந்து கொள்ளாதது, அவ்வபோது மாநகரம் காட்டிய கோரைப்பல் என எல்லாம் கடந்த அந்த தோழிக்கு மனசு கொஞ்சம் கொஞ்சமாய் மறுத்துப்போய்விட்டது.

அவளை நீண்ட இடைவெளிக்குபின் பெங்களூரில் சந்தித்தேன். அவள் இனிமை பேச்சுகளை காலம் மாற்றி போட்டிருந்தது. அனைவரையும் ஏதோ ஒரு சந்தேக உணர்வுடனே பார்க்க பழகியிருந்தாள். மனதில் படிந்த சமூக கோபங்களும், தேவையான அமைதியும் இல்லாத எந்திர வாழ்வும், அவளை மெஷினாக மாற்றியிருந்தது. விடுதிகளில் தங்குவது கூட தன் தனிமைக்கு தடையாக இருப்பதாக நினைத்து தனிமையில் வீடு எடுத்து தங்கியிருந்தாள். நல்ல வேலை. நல்ல சம்பளம், நல்ல உடை. நல்ல இருப்பிடம். ஆனால் நண்பர்கள் இல்லாத வாழ்வு. அவ்வப்போது ஆதரவளித்த சித்தியை தவிர யாரையும் உறவாக ஏற்றுக்கொள்ளாத மனசு. இருபதுகளில் நிராகரித்த காதல்கள் முப்பதுகளில் பழிவாங்கியது. தானாகவும் தேடாமல், பெற்றோரும் தேடி வைக்காமல், மணமாகமலே ஒரு மனம் வாடி, வதங்கி, இறுகி கல்லாகிப் போனது. எப்போதும் வெடிக்க காத்திருக்கும் அந்த பெண்மனதின் எரிமலை குழம்புகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாத போதிலும், காலம் அவ்வப்போது அவள் கண்ணத்தில் கண்ணீரால் எழுதிவிடுகிறது. அதை படிக்கவோ துடைக்கவோ யாருமின்றி.



மூன்று நாட்களுக்கு முன் பிறந்த கன்று குட்டியாய், எப்போதும், சந்தோஷத்தோடு துள்ளி விளையாடி சிரிக்கும் தோழி இந்து. முதலில் மாணவியாக அறிமுகமாகி, தோழியாகி, குடும்ப நண்பர்களான பல நட்புகளில் இவளும் ஒருத்தி. ப்ராஜெக்ட் செய்து கொடுத்து, வேலைக்கு உதவி, ஒரே ஊரிலிருந்தாலும், சென்று வர சிரமமாக இருந்ததால், எங்கள் வீட்டின் அருகிலேயே அவளுக்கும், அலுவலக தோழிகளுக்கும் வீடு பிடித்து கொடுத்து, எங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக்கொண்டோம். என் மேல் அவளுக்கு அப்படியொரு மரியாதை, அன்பு எல்லாம். குரு-சிஷ்ய பந்தமெல்லாம் போய், நண்பர்களாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. யார் தன்னை பார்க்கிறார்கள், யாரை தனக்கு பிடிக்கும் என எல்லாம் பேசுவோம். அவள் ஆர்வம் பலவற்றில் பரந்திருந்தது. உலகை ரசிக்க அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அதே ஊரில் தனி வீடு எடுத்து தங்கியிருந்த போதும், அதற்கு பின் வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்று, அங்கு தன் தோழியோடு ஒரு அபார்ட்மென்டில் தங்கியிருந்ததும் தான் அவள் வாழ்வின் வசந்தகாலங்கள். உலகை ரசித்த அவளின் தினங்கள்.

அந்த நாட்களில், அதிகாலை எழுந்து ஓடுவதிலிருந்து, தனக்கு வேண்டிய உடைகளணிவது, அவற்றிர்க்கு பொருத்தமான வளையல், தோடு வாங்க டி-நகர் செல்வது, ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதால், உடலைப் பற்றி கவலைப்படாமல், நினைத்ததை சாப்பிடுவது, சந்தைக்கு வரும் ஆங்கில புத்தகங்களை உடனடியாக வாங்கி முதல் வேலையாக படித்து முடிப்பது, இரவு தனக்கு விருப்பமானவர்களுடன் மணிக்கணக்காக அரட்டையடிப்பது என அவளுக்கு பிடித்ததெல்லாம் செய்தாள். மரத்தான் ஓட்டம், வேடிக்கை பார்க்க சென்ற ஒரு நாட்டிய கலை விழாவில், யாரேனும் ஆட வருகிறீர்களா என்றதும், வரிந்து கட்டிக்கொண்டு போய் ஆட்டம் போட்டது என தன் இஷ்டம் போல் பறந்த பட்டாம்பூச்சி. ஒருமுறை, இரவில் தங்கி மறு நாள் திரும்பும் ட்ரெக்கிங்க் போக வேண்டும் என்றாள். அவர்கள் பெற்றோர் எல்லாம் சம்மதித்தும், எனக்கு ஏதோ சரியாக படவில்லை என்று நான் தடுக்க, போகாமல் நின்று விட்டாள்.  அதற்காக வாங்கிய கூடாரம், படுக்கை, ஷூ என அனைத்தையும் உபயோகப்படுத்தாமல், அவள் நண்பர்களிடம் விற்றுவிட்டாள். (அனுப்பியிருக்கலாமோ). நான் என் புகைப்பட வாழ்வில் முதன்முதலில் ஊட் லாமினேஷன் செய்த அழகி. அனைவரிடமும் அன்பாக, கள்ளம் கபடமில்லாமல் பழகும் அவளை பெரும்பாலான அலுவலக நண்பர்கள் தங்கையாக தான் பார்த்தார்கள். அதில் அவளுக்கே கூட வருத்தம். ஏன் தன்னை யாரும் சைட் அடிப்பதில்லை என்று வெகுளியாக கேட்ப்பாள். தனக்கு வெளிநாடு சென்று அங்கேயே ஒரு ஐந்தாறு வருடம் தங்க வேண்டும், அப்படி ஒரு மெல்லியல் வல்லுநர் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் ஆசைப்பட்டாள்.

தகவல் தொழில்நுட்பம் ஒரு பெரிய குமிழியாய் வெடிக்கும் தறுவாயில் இருந்த நேரம். எப்போது வேண்டுமானாலும் ரிசஷன் என்று சொல்லி ஆள் குறைப்பு செய்துவிடுவார்கள் என அவர் அப்பாவும், நானும் அந்த ஆசைக்கு அனைப்போட்டோம். அவர் தந்தை எவ்வளவு சொல்லியும் ஒரு அரசு மருத்துவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அவளின் பெற்றோர் என்னிடத்தில் பேசி அவளை சம்மதிக்க வைக்க சொல்ல, நானும் என் பங்குக்கு அவளுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழியில் எனக்கு தெரிந்ததை சொன்னேன். நம்மில் பலரும் செய்யும் அதே தவறு தான். திருமணம் என்பதில், பொறுத்தம் பார்க்கும் போது, இரு வீட்டாரின் நிதி நிலவரம், கணவன் (இப்போதெல்லாம் மனைவி) வருமாணம், இருவரின் ஆரோக்கியம், தீயப் பழக்கம் ஏதும் இருக்கிறதா? இவையெல்லாம் சரியாக இருப்பின் திருமணம் செய்யலாம் என்னும் முடிவுக்கு வருதல். இதை தான் நானும், அந்த தோழியின் பெற்றோரும் செய்தோம். இதில் யாரும் அந்த பெண்ணின் கனவு, அவள் ஆசை, அவள் எப்படி வாழ ஆசைப்பட்டாள் என எதையும் யோசிக்கவில்லை. அவள் கேட்டுக்கொண்டதால், திருமணத்திற்கு பின்னும் வேலைக்கு செல்ல அனுமதி (?!) மட்டும் பெற்று தந்தோம். பெரும்பாலான பெண்களுக்கு இவ்வளவு சலுகைகள் கூட கிடைப்பதில்லை. எல்லா பெண்களின் வாழ்வை, ஏன் மனதை கூட திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இரு வேறு துருவங்களாக பிரிக்கலாம்.

ஐந்தரை மணிக்கு றெக்கை விரித்து பழகிய அந்த பட்டாம்பூச்சிக்கு, இப்போதெல்லாம் வீட்டிற்குள் ட்ரெட்மில்லில் ஆரம்பிக்கிறது வாழ்க்கை. அருகில் உள்ள எந்த அபார்ட்மென்டிலும் நல்லவர்கள் இல்லை என்னும் பயமுறுத்தலில் பறிக்கப்பட்டுவிட்டது பேச்சு சுதந்திரம். உன் வளர்ப்பு சரியில்லை என்ற வசை மொழியில் பறிக்கப்பட்டுவிட்டது தன் பிறந்த வீட்டினிரடம் கொண்ட தொடர்பு. சொந்த தம்பி வந்தாலும், சோறு போட்டு, நல்ல ரூமில் வாடகைக்கு தங்கிக்கொள்ள  அவளாகவே சொல்லுவது
போல் சொல்லும் தேர்ந்த நடிப்பில் பறிக்கப்பட்டது அவளின் பாசம்.. நான்காவது நாளிற்கு எக்ஸ்ட்ரா வாங்கிய நாப்கின் விலையை கணக்கு பார்த்ததில் பறிக்கப்பட்டது அவள் ஊதியம், நடப்பது தெரியாமல் நாடு கடந்த நண்பர்களின் நல விசாரிப்புகளின் அழைப்புகளை அவசர அவசரமாக அழித்து, கைப்பேசி சோதனைகளில் தன்னை காத்துக் கொள்வதில் பறிக்கப்பட்டது அவள் சுதந்திரம். என்ன ஆனாலும் கணவனை இழந்தவர்க்கு காட்டுவது இல் - எனவே திருமண வாழ்வை தொலைத்து விடாதே என்ற இந்த சமூகத்தின் பயமுறுத்தலில் பறிக்கப்பட்டுவிட்டது அவளது மொத்த வாழ்க்கை. எல்லாம் இழந்தும் இந்த பெண்கள் இந்த திருமண வாழ்வில் என்ன கண்டெடுக்கிறார்கள்?  உணர்வற்ற வெறும் உடலாய் வாழும் இவர்கள் எதை சாதிக்க இப்படி நடைப்பிணமாக இருக்க சம்மதிக்கிறார்கள். கணவனின் நியாயமற்ற சிறு கோபத்தில், கையில் அகப்பட்டதைக் கொண்டு தாக்கும் பைத்தியக்கார தணத்தில் மரணம் கூட நிகழலாம் என தெரிந்தும், அந்த கணவனை, அந்த உறவுகளை விட்டு வெளி வராமல், உலகின் பழிக்கு அஞ்சி, தினம்தினம் செத்து பிழைக்கும் இந்த பெண்கள் குடும்ப வாழ்வில் நிலை நாட்ட நினைப்பது என்ன?  நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம் என எல்லாம் இருந்தும், தனித்து வாழ பயந்து அடிமை வாழ்வு வாழ செய்வது எது? புரியவில்லை.

என்ன ஆனாலும் வேலையை மட்டும் விட்டு விடாதே என்ற என் அறிவுரையின் படி, இப்போதும் வேலைக்கு செல்கிறாள் அவள். அவளின் கணவர் அழைத்து வந்து விடுவதும், பணி முடித்து, நிறுவன பேருந்திலேயே வீட்டிற்கு அவள் திரும்புவதும், இடையில் யார் வம்புக்கும் (?!) போகாமல், கருமமே கண்ணாக கணினியுடம் பேசுவதும், வெளியூர் செல்ல வேண்டிய வேலை வந்தால், பிள்ளை வரம் வேண்டி மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லி அந்த வாய்ப்புகளை மறுப்பதும், எந்த நண்பர்கள் வீட்டிற்கோ, உறவினர் வீட்டிற்கோ போகாமல், வாரம் ஒருமுறை, காய்கறி வாங்க, கணவரோடு காரில் வந்து, ஏதோ ஒரு பவனில் மதியம் உண்டு, இரவு காட்சி திரைப்படம் பார்த்து, இருவர் மட்டும் வாழும் அந்த தனித்த உலகில் ஹௌஸ் அரஸ்ட்-டில் வாழ்கிறார். கணவனை பிரியாத 'மேட் ஃபார் ஈச் அதர்'
தம்பதிகளாக, அந்நியோன்யமாக தான் வெளியே பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆனால் தன் சுயத்தை இழந்து, தன் சின்ன சின்ன ஆசைகளைக் கூட தானாக செய்து கொள்ள சுதந்திரமில்லாத ஒரு பணக்கார பங்களாவின், பதினொன்றாவது நாய்க்குட்டியாகிப் போன அவள் வாழ்வு, திருமணத்திற்கு முன் அவளை பார்த்திராத மற்றவர் கண்களுக்கு வேண்டுமானால் பரவசமாக தெரியலாம். அதற்கு முன்னே அவளை நன்றாக அறிந்த என்னை போன்றவர்களுக்கு எங்கோ படித்த கவிதை தான் ஞாபகம் வருகிறது.

ஒற்றை காலில் நின்று
தவம்செய்யும் கொக்கு
பார்ப்பவர் மனம் திருடும்
பரவச காட்சி.
மீனுக்கு தானே தெரியும்
கொக்கின் கொரூரம்.



கல்லூரியில் படித்த காலம் தொட்டே, வேலைக்கெல்லாம் செல்ல விருப்பமில்லை. கணவன், மனைவி, குடும்பம் என வாழ்வது தான் தன் வாழ்வின் குறிக்கோள் என்றும், என்னை போல், குடும்பத்தை ஓரிடத்தில் விட்டுவிட்டு வேலைக்கு ஓரிடத்தில் வாழ்வது வாழ்க்கையில்லை என்றும் எனக்கு அறிவுரை சொன்ன தோழி 'குட்டிம்மா'.  பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனத்திலிருந்த வேலையை, கல்யாண ஏற்பாடுகள் செய்யும் போது தூக்கி வீசிவிட்டு, குடும்பம் தான் தன் வாழ்க்கை என்று வீட்டோடு மனைவியாகிவிட்டாள். ஆறு ஆண்டுகளாக, வீட்டிற்கு வெளியே ஒரு உலகம் இருப்பதையே மறந்து போயிருந்தாள். பாதி இரவில்பணி முடித்து வந்தாலும், தன் இரண்டு மகன்களை கொஞ்சி, அதற்குப்பின் படுத்துறங்கிய கணவன் மேல் எந்த சந்தேகமும் தோன்றவில்லை. அவளுடைய மாமனாரே ஒருமுறை வந்து, சொந்த வியாபாரமாயிருந்தாலும், அவ்வப்போது வந்து தலைக்காட்டா விட்டால், வியாபாரம் நலிந்து போகும் என்றும், ஆறேழு நாட்களாக அலுவலகம் வராமல் அப்படியென்ன அவனுக்கு வேலை என்றும் அவள் கணவரை கேட்கும் வரை, அவர் வேலைக்கு செல்லவில்லை என்பதே தெரியாமல் இருந்திருக்கிறாள். விசாரணை கிணறு வெட்ட, வேறொருத்தியுடன் தொடர்பு என்னும் பூதம் கிளம்பியது. அவள் கெஞ்சி அழுததாலோ, அல்ல அவளின் மாமனார், 'சொத்தில் சல்லி பெறாது' என்று மிரட்டியதாலோ, மீண்டும் நல்ல பிள்ளையாக அவள் கணவர் வேலைக்கு சென்று வந்தார். என்றோ ஒரு நாள் எத்தேட்சையாக கைப்பேசியில் பார்க்க, தொடர்பு சரிவர துண்டிக்கப்படாதது கண்டு துடித்திருக்கிறாள். அவள் கணவனிடம் வெடித்திருக்கிறாள். வெளியிலுள்ள எல்லா தவறுகளையும் திருத்திக்கொள்ள அவருக்கு சற்று அவகாசம் தரும்படி கேட்டிருக்கிறார் அவள் கணவர். அவர் மீது வைத்த அன்பினால், தன் பிறந்த வீட்டிற்கு எந்த தவலும் தெரிவிக்காமல், புகுந்த வீட்டிலும் கணவரை காக்க, எல்லாம் சரியாக இருப்பதாக நடித்து வாழ்ந்து வந்திருக்கிறாள் தோழி. ஒரு முறை மூன்று நாட்களாகியும் கணவன் வராத போது தான், மீண்டும் தவறு நடந்திருப்பது அவளுக்கு உறைத்திருக்கிறது. அவ்வளவு தாமதத்திற்கு பின் அலாரம் அடித்து பயனில்லை. ஆள் வைத்து தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. ஆறு மாத காலம் எப்படியும் வந்துவிடுவார் என நம்பி புகுந்த வீட்டிலேயே காத்திருக்க, தகவல் ஏதுமில்லை. பின்னொரு நாள் அவளின் கணவர், அவராகவே அவள் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, அவர் வேறொருத்தியுடன் வாழ்வதாகவும், அவளுக்கு விருப்பமிருந்தால், அவர்களோடு வந்து இவளும் வாழ்ந்து கொள்ளலாம் என்றும், தவறுகள் தலைக்கு மேல் போய்விட்டதென்றும், அவரால் திரும்பி வர இயலாதென்றும் சொல்லிவிட்டார்.

பஞ்சாயத்து, சண்டை, போலிஸ் மிரட்டல் என எதற்கும் பிடி கொடுக்காத அவரை வெட்டிவிட்டு வேறு வாழ்க்கை வாழ சொன்னால், அவர் வரும் வரை என் அம்மா வீட்டில் காத்திருக்கிறேன் என சினிமா வசனம் பேசி வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறாள். உப்பு பெறாத பிரச்சனைகளுக்கெல்லாம் விடுதலைப்பத்திரம் கேட்டும், ஜீவணாம்சம் கேட்டும், நீதிமன்றத்தின் வாசலில் காத்திருக்கும் பெண்கள் உள்ள இந்த கால கட்டத்தில், 'பழசை எல்லாம் விட்டுவிட்டு, தனி ஆளாக வந்தால் போதும். அவரை நான் ஏற்றுக் கொள்வேன். அவரை வீட்டில் வைத்து, நான் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவேன்' என்று சொல்லி அவருக்காக இன்னமும் காத்திருக்கிறாள். அப்பா எப்போ வருவார் என நித்தம் கேட்கும் அந்த பிஞ்சு குழந்தைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு, தன் அம்மாவிடம் அப்பாவை விசாரிப்பதை நிறுத்திக்கொண்டார்கள். குழந்தைகளை பார்த்துக்கொண்டே வேலைப் பார்க்க, வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் அவள் மட்டும், இன்னமும் புரிந்துக்கொள்ளாமல், அந்த ஆறு ஆண்டு வாழ்வை மறக்காமல், பட்டுப்போன மரம் மீண்டும் பூ பூக்கும் என நம்பி இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறாள். குடும்ப வாழ்வை தவிற, வேறேதும் யோசிக்காத அவளின் வாழ்வு, கணவனையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டதை தவிற வேறெந்த தவறும் செய்யாத அவள் வாழ்க்கை ஏன் இப்படி ஆனதென்ற அவளின் ஆழ்மன கேள்விக்கு பதில் இருப்பதாக தெரியவில்லை.



நாலு வருடத்திற்கு மேல் பழகிய நண்பன் அவன். வேலை நிமித்தமாக சென்னையிலிருந்து ஐதராபாத் சென்ற போதும், துரத்தி துரத்தி அங்கு வந்து காதலித்தவன். அவனிடம், நண்பனாக மட்டும் பழகுவோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவன் திருமணத்திற்கு நிச்சயம் செய்தவுடன், நாள் முழுதும் அழுது புலம்பி, அவனை எப்படியாவது என்னிடம் சேர்த்து வையுங்க செந்தில், அவன் என்னை விட்டு போய்விட்டால், இந்த உலகத்தை விட்டு போய் விடுவேன் என்று கெஞ்சிய தோழியின் மனசை புரிந்து கொள்வது எப்படி?. காதல் படிகட்டுகள் புத்தகம் படித்துவிட்டு, உங்கள் உணர்வுகளை எழுதி கொடுங்கள் என்று நான் கேட்க, வேறு பெண்ணை நான் காதலிக்கிறேன் என தெரிந்தும், முதன் முதலில் காதலிப்பது உங்களை தான் என உருக்கமாக கண்ணீர் விட்டு எழுதி கொடுத்து விட்டு, ஆனால் உங்கள் வாழ்க்கையில் தலையிட மாட்டேன் என்று ஓதுங்கி நின்று காதல் செய்யும் இன்னொரு தோழியின் மனதை இன்னமும்  புரிந்து கொள்ள முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை செல்லம் என கூப்பிட்ட உன்னை விட்டு, வாழ்க்கையில் ஒருமுறை கூட அந்த வார்த்தையை சொல்லாத ஒருவரோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என சொல்லும் வேறொரு தோழிக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்? சிக்னலிலிருந்து கோயில் வரை தொடர செய்த கொள்ளை அழகு. குறும்படத்தில் கதாநாயகியாக ஆக்கிவிட பின் தொடர்ந்த முன் பின் அறிமுகமில்லாத பெண். கோவிலுக்கு சென்றவள் ரொம்ப நேரமாகியும் வராததை கண்டு உள்ளே போக.. இரண்டு மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து தாரை தாரயாக அழுது கொண்டிருந்த காட்சி இன்னமும் நெஞ்சை கணக்கிறது. கடவுளிடம் கூட சொல்லிக் கொள்ளமுடியாத வலி தானே அந்த கண்ணீர். தன் பெண்ணின் அபார்ஷனுக்காக அவள் காதலனுடன் சென்ற ஒரு அம்மாவை தப்பாக சொன்னதால், அன்றிலிருந்து ஆயுள் முழுதும் தன் கணவனை தொட்டுக்கொள்ளாமல் ஒரே கட்டிலில் எப்படி படுத்துக்கொள்ள முடிந்தது அந்த அம்மாவால். ஒவ்வொரு இரவும் ஒரு யுகம் தானே.  .

இப்படி, பெண்மனசு என்னும் சொல் என்னுள்ளே பல நினைவுகளை அடுக்கிக்கொண்டே போகிறது. ஏதேனும் ஒன்று சந்தோஷமானதாக இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு கதைகளிலும் ஆற்ற இயலாத வலியும், அதன் வடுக்களுமே தென்படுகின்றன.

பதினோரு வருடங்களுக்கு பின் மகனை ஈன்றெடுத்த அருள் அக்காவிற்கு அந்த சந்தோஷத்தை மூன்று வருடங்கள் கூட அனுபவிக்க முடியவில்லை.

தன்னிடம் செக்ஸ் எதிர்ப்பார்த்த மாணவனை தண்டிக்காமல், அவன் வயதின் கோளாறுகளை புரிந்து கொண்டு அவன் மனதில் அப்படி ஒரு சலனம் தோன்ற தான் காரணமாகிவிட்டோமே என வருந்தும் நல்லுள்ளம் கொண்ட என் ஆசிரியர் ஒருத்திக்கு, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை.

ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைவான, திடகாத்திரமான விளையாட்டு வீராங்கனையான இன்னொரு தோழி சுஜாதா மிஸ்.  எய்ட்ஸ்-சில் பாதித்த அவர் மாமாவை வேறு யாரும் மணக்க முன் வரவில்லை என்று அவரே மணந்தார். செக்ஸ் மட்டும் வாழ்க்கையில்லை, அவர் இறக்கும் போது சந்தோஷமாக இறக்கட்டும் என என்னிடம் சொல்லுவார். மணமாகி ஒரு வருடம் கூட வாழாதவளுக்கு சொத்தில் பங்கில்லை என்று சொந்தங்கள் சொல்ல, எதுவும் பேசாமல் இப்போது தனியாளாக வாழ்கிறார். கட்டுக்கோப்பான அழகு அவருக்கு ஆபத்து கொடுப்பதால் எப்போதும் தானாக மொட்டை போட்டுக்கொண்டு உலவும் அவர் மனசில் தான் எவ்வளவு வலி.

இரண்டு பெண்களில் இளையவள் என் தோழி. முப்புதுகளை தாண்டியும் மணமாகவில்லை. இளையவளும் போய்விட்டால் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவது என்று வருகின்ற வரனையெல்லாம் அப்பா தான் தடுக்கிறார் என தெரியும் வரும்போது, அந்த தோழியின் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்.

அனைவரின் முன்னில் அப்பா என்றழைக்க சொன்ன அதிகாரி, குடும்ப நண்பர். யாருமில்லாத நேரத்தில் தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள துணிவதும், வாங்கிய கடன் அடைக்க முடியாமல், அந்த அப்பாவி(யி)ன் சொந்த நிறுவனத்தை விட்டு வெளிவரமுடியாமல், தினம் தினம் அல்லாடிய சரளா அக்கா.  டார்ச்சர் முத்திப் போக கணவரிடம் சொல்ல, பத்தினி வேஷம் கலைத்து கடன் அடைத்தால் தான் என்ன என அட்வைஸ் பண்ணும் வேலைக்கு செல்லாத கணவன். குழந்தைக்கூட இல்லாத அவர் அந்த கணவனுக்காக இன்னமும் அந்த நரகத்தில் வேலை செய்வது ஏன்?

சரியான பிள்ளை இல்லை என குடிக்கும் கணவன், சரியான அப்பா இல்லை என வருந்தும் பிள்ளை. இருவருக்கு மத்தியில் இருக்கொள்ளி எறும்பாக எத்தனை பெண்மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.

"வேலைக்கு போக முடியவில்லை, கடன் தொல்லைகளெல்லாம் நீ பார்த்துக்கொண்டால், வீட்டிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வேன்" என்று ஒவ்வொரு நாள் இரவும், ஒன்பதரைக்கு மேல் வேலையிலிருந்து திரும்பும் என் மனைவி சொல்லும் போதும், "எப்படா நீயும் நானும் ஒன்றாக இருப்போம்" என்று வெளியூரில் வேலை பார்க்கும் என்னிடம் கேட்டு சன்னமாக மனைவி விசும்பும் போதும், "மற்ற அப்பாக்களேல்லாம் இதே ஊரில் வேலை பார்க்கவில்லையா? உன்னால் மட்டும் எப்படி என்னை பிரிந்திருக்க முடிகிறது, உன்னை பார்க்கனும்பா, ஒருமுறை வந்து உன் முகம் காட்டிவிட்டு போ" என ஒரே மகள் கெஞ்சும் போதும், கமிட்மெண்டுகளை காரணம் காட்டி, அப்புறம் பார்க்கலாம் என தட்டி கழிக்கும் போது, அவர்கள் மனசு படும் வேதனையை, இதையெல்லாம் எழுதும் நானே உணரவில்லை தானே.

தன் காதலனை, நண்பனை, உடன் பிறந்த உறவுகளை, சமயத்தில் பெற்றோர்களை பார்த்தாலும் பேசிக்கொள்ள இயலாத சூழ்நிலையில், ஆணாதிக்கத்தாலோ, வேறு கட்டுப்பாடுகளாளோ, மனதை கல்லாக்கிக் கொண்டு பிரிந்து விடும் அவர்களின் அன்றைய தனிமையில்,  இந்த பெண்கள், அவர்களின் மனதோடு நடத்தும் போராட்டம் என்ன? அன்பை பகிர ஆளில்லாமல் அவர்கள் படும் அவதிகளை, சொல்ல ஆளில்லாமல் அவர்கள் மனதில் புதையுண்ட ரகசியங்களை, கொல்லையிலும், கோயிலிலும், படுக்கையிலும், அடுக்கலையிலும், கண்ணீர் கொண்டு வார்த்தைகள் விழுங்கிய மன அதிர்வுகளை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்ன? உயிர் போகும் பல் வலியின் உச்சக்கட்ட வலிக்கூட ஓரிரு டெசிப்பிள் (வலியின் அளவுகோள்) தானாம். ஆனால் ஒரு சுக(?!) பிரசவத்தில் 120 டெசிப்பிள்கள் வரை தாங்கி, மீண்டும் பிழைத்து வந்த பெண்கள், வேறு சில மன வேதனைகளில், செத்துவிடலாமென நினைக்கிறார்களெனில், அந்த மன வலியின் டெசிப்பிள்களை, வேதனைகளை யாரால் அறிந்து கொள்ள முடியும்.

எல்லா பாடல்களிலும் வேதனையை போக்கும் இளையராஜா கூட, இந்த பாடலில் இன்னும் தான் வேதனை கூட்டுகிறார்...மனம் அழுது அவர் பாடுவது நெஞ்சை அடைக்கிறது...

"பெண்மனசு ஆழமின்னு ஆம்பிளைக்கு தெரியும்....
அது பொம்பளைக்கும் தெரியும்....
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்கு தான் தெரியும்... அது
யாருக்கு தான் தெரியும்."

Friday, November 20, 2015

பசி

ரொம்ப சிலாகித்து, மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம் ராஜு முருகனின் வட்டியும் முதலும். ஒரு பத்தியில் உங்களை ஒரு உணர்வுக்கு கொண்டு சென்றுவிடுவார். எத்தனை முறை படித்தாலும், ஏதோ ஒரு பத்தியில், திடுமென அழவைப்பதும், அடுத்த பத்தியில் ஆசுவாசப்படுத்தி, பின் சிரிக்க வைப்பதுமாக, ஒரு உண்ர்வு குவியலாக இருக்கும் அந்த புத்தகம். எந்த அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கலாம் என்பது அந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பு. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு இருக்கும். இதே போல் அத்தியாயத்திற்கு ஒரு பொருள் கொண்டு பல non-fictional புத்தகங்கள் வந்தாலும், இதில் நீங்கள் எந்த பத்தியிலிருந்தும் தொடங்கலாம். ஒவ்வொன்றும் ஒரு அனுபவக்குவியல். என்னைப் போல் நீண்ட நேரம் வாசிக்காத, நேரம் கிடைக்கும் போது, ஏதேனும் வாசிக்க நினைக்கும் whatsApp generationகளுக்கு மிகவும் எளிதான புத்தக விருந்து... ஒரு Fast Food போல எளிதில் கிடைப்பதாகவும், அதே சமயம், அம்மாவின் கைப் பக்குவம் போல் அனுசரனையாகவும் இருக்கும்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு chapter படித்ததும் எனக்குள் தோன்றும் எண்ணங்களை எழுதி வைக்க முடிவு செய்து, என் எண்ண உணர்வுகளை பதிவது தான் இந்த எழுத்துக்கள். முதல் chapter - பசி.

ஒரே வீட்டில் தனித்தனி சமையல், முந்தியில் எடுத்து வரும் பிள்ளைகளுக்கான சோறு, இலையில் பறிமாறிய விருந்தின் முதல் கவலம் செல்லும் முன் முட்டிக் கொண்டு வந்த கண்ணீர், பசி வயிற்றை இறுக்க, அழுக்கு துணியுடன் குறுக்கி படுத்து கிடந்த மேன்ஷன் வாழ்க்கை என, என் வாழ்க்கையில் நானும் அனுபவித்த பேய் பசியின் கோர முகத்தை எனக்கு மீண்டும் நினைவூட்டியதாலோ என்னவோ, இதை படித்தவுடனே எழுத்து என்னை எழுத சொல்லி உந்தி தள்ளியது. பசி என்றால் வறுமையினால் மட்டும் தான் என்று பொருள் அல்ல... பிடிவாதத்தாலும், கௌரவம் பார்த்தும், சுயத்தை இழக்கக்கூடாதென்ற வீம்பும், சில சமயம், எல்லாம் இருந்தும், உணவு கிடைக்காததும் கூட பசியோடு இருக்க வைக்கும் காரணிகள் தாம்.

என் பால்ய காலம் விடுதியில் தான் கழிந்தது. ஒரே பிள்ளையானாலும், சொல் பேச்சு கேட்காத பிள்ளையை, நல்வழிப்படுத்த தன் சக்தியை தாண்டி செலவு செய்து விடுதியில் தங்க வைத்து, படிக்க வைத்திருந்தார் என் அப்பா. ஒழுக்கம், படிப்பு, விளையாட்டு, உணவு என்ற எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய பள்ளி தான். ஆனால் அந்த சின்ன வயதில் காரையோடு, இளஞ்சிவப்பில் இருந்த கைக்குத்தல் அரிசி, உடம்பிற்கு நல்லதென்று தெரியவில்லை. சக்கைப் போல் ருசி இழந்து, கொழ கொழத்து கஞ்சி சுற்றிய அந்த சுடு சோறு அப்போது ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை. ஓரிரு நாட்கள் முயன்றும், சாப்பிடாமல் அடம் பிடித்தும் பார்த்தேன். அனைவரின் இலக்கணத்திலிருந்து எனக்கு மட்டும் விதிவிளக்கு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிந்து கொண்டேன். மதியம் ஒரு வேளை தானே, சாப்பிடாமல் இருந்தால் போகுது என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, மதிய உணவு இடைவேளைகளில், விடுதிக்கு அந்த கைக்குத்தல் அரிசி சாப்பாட்டை, சாப்பிட செல்லாமல், எங்காவது ஒளிந்து கொள்வதுண்டு. வெகு நாள் நான் மதிய உணவு சாப்பிடாமல் இருந்தது யாருக்கும் தெரியவே இல்லை. விடுதியில் பொங்கல், உப்புமா போன்றவற்றை காலை சிற்றுண்டியாக போடும் காலங்களில் என் பாடு இன்னும் திண்டாட்டமாக இருந்தது. அதைப் போன்ற நாட்களில் காலை மதியம் என இரண்டு வேளைகளையும் தவிர்க்க ஆரம்பித்தேன். சின்ன வயது, எப்போதும் போல் இல்லாமல் ஒரு நாள், நல்ல பசி, இருப்பினும் கைக்குத்தல் சாப்பிட கூடாதென்று ஒரு வீம்பு. அன்று காலையும் நான் சாப்பிடாமல் இருந்தேனோ என்னவோ தெரியவில்லை. மதியம் உணவு இடைவேளையில் எல்லோரும் சாப்பிட செல்ல, நான் என் வழக்கமான ஒளிவிடம் செல்ல முடியாமல், வகுப்பறையிலேயே, என் இருக்கையின் மேசையிலேயே சாய்ந்து படுத்து விட்டேன்.

யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய போது தான், நான் தூங்கவில்லை, அப்படியே மயங்கியிருக்கிறேன் என்று எனக்கு புரிய வந்தது. விசாரணையில் நான் சாப்பிடாதது கண்டு பிடிக்கப்பட்டு, என்னை நன்றாக திட்டி, யாரோ கொண்டு வந்த உணவளித்து என் பசிப் போக்கினார்கள். அதற்கு பிறகும், அடுத்த நாளிலிருந்து எனக்கு தனியாக பச்சரிசி சோறு கேட்டும், அது முடியவே முடியாதென்று மீண்டும் மறுக்கப்பட்டது. நானும் மதிய உணவினை தவிர்க்க ஆரம்பித்தேன். முன் போல் இல்லாமல், இப்போது மீண்டும் நான் மதிய உணவினை தவிர்ப்பதை கண்டு, என் மேல் பரிதாபப்பட, இப்போது ஒரு ஆசிரியை இருந்தார். அவர்.. அமுதா மிஸ். அமுதா மிஸ் விடுதியில் தங்கியிருந்த படி, எங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தும் டீச்சர். எங்கள் விடுதியில், ஆசிரியர்களுக்கு மட்டும் வெள்ளை அரிசி பரிமாறுவதுண்டு. நான் சாப்பிடாமல் கிடந்ததை கண்டு பிடித்த அந்த நிகழ்வுக்கு பின், அமுதா மிஸ், அவர்கள் சாப்பிடுவது போல் அவர் தட்டில் சாப்பாடு போட்டு வந்து, அதில் எனக்கு பங்களித்து, என் அரை வியிற்றை நிரப்பி, தன் அரை வயிற்றை, எனக்கு உணவளித்த திருப்தியால் மட்டுமே நிறைத்துக் கொண்டார். வித்தை கற்றுக் கொடுத்தவர்களுக்கே நன்றி கடன் செலுத்த ஆயுள் பத்தாது என்பார்கள். பாடமும் சொல்லி கொடுத்து, வாழ்க்கையின் பாதையும் சொல்லி கொடுத்து, பசியை, பாசத்தை பகிர்ந்துண்ட அமுதா மிஸ்ஸுக்கு எந்த ஜென்மத்தில், எப்படி நன்றி கடன் செலுத்துவது.

சொந்த ஊர் செம்பராம்பட்டு. அப்போதல்லாம் ஊர்களின் வரைப்படம் (map)பார்க்க அட்லஸ் என்று ஒரு புத்தகம். அதில் இந்தியா இரண்டு பக்கம், அதை zoom செய்து, தமிழ்நாடு இரண்டு பக்கம், அதையும் zoom செய்து விழுப்புரம் மாவட்டம் இரண்டு பக்கம் என்று பெரிது செய்து பார்த்தால் கூட, அந்த சிறு கிராமத்தை கண்டுபிடிக்க இயலாது. சிட்டிஸன் படத்தில் அழிந்து போன அத்திப்பட்டி கிராமத்தை வரைப்படத்தில் தேடுவது போல் தேடிய காலம் உண்டு. அதில் இரு ஆசிரியர் பள்ளி ஒன்று உண்டு. அதில் தான் "சின்னப்பா" தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை. பொறுமையாக குளித்து முடித்து, வெள்ள நிற வேட்டி சட்டை, துண்டு அணிந்து, குடை இல்லாத சின்ன கவுண்டர் போல் சிங்காரமாக அந்த பள்ளிக்கு போவார். அவர் மிதிவண்டியில், பள்ளிக்கு செல்லும் அழகே தனி. ஓரிரு வகுப்புகள் கட்டிடத்தின் உள்ளேயும், மற்றவை அங்கிருந்த மரத்தடிகளிலும் நடக்கும் அந்த பள்ளியும் ஒரு தனி அழகு. இப்போதெல்லாம் அந்த பள்ளியின் கட்டிடம் வரை கூகுளில் பார்க்க முடிகிறது. அந்த வெள்ளுடையின் மிடுக்கா, அல்லது அவர் நடத்தும் விதமா? அல்ல அவர் அன்பா தெரியாது, அவர் மேல் அந்த ஊர் மக்களுக்கே ஒரு மதிப்பும், மரியாதையும் இருந்தது. நான் ஆங்கில வழியில் படித்ததாலோ என்னவோ  நான் பேசும் தமிழில், என் பல வார்த்தைகளை திருத்திக் கொண்டே இருப்பார். வாத்தியார் என்று சொல்லக் கூடாது. ஆசிரியர் என்று சொல்ல வேண்டும். நொங்கு அல்ல, நுங்கு, விரதம் அல்ல நோன்பு என்று பல வார்த்தைகளை திருத்தம் செய்திருக்கிறார். அப்படி அவர் திருத்தியதில் ஒன்று சாதம் அல்ல சோறு. அவரோடு சாப்பிட அமரும் போது, இன்னும் கொஞ்சம் சாதம் போடுங்க என்று மறந்து சொன்னாலும், சாப்பாடு போடுபவரை நிறுத்தி, சோறு போடுங்க-ன்னு என்னை சொல்ல சொல்லி, பின் உணவு பரிமாற சொல்லுவார்.

அவருக்கு ஒரே கெட்டப்பழக்கம், மது அருந்துவது. சில சமயம், சம்பளம்... (சம்பளம் அல்ல ஊதியம்) வாங்கிய அதே நாள் மாலை குடிக்க சென்று, நன்றாக குடித்து, அங்கேயே விழுந்து கிடக்க, அவர் பையில் இருந்த முழு பணமும் கலவாடப் பட்டுவிடும். அவரின் வருவாய் மட்டுமே நம்பியிருந்த அவர் குடும்பம் அந்த மாதம் முழுவதும் சிரமப்படும். அப்படி இல்லாதிருந்தால், அவர் வருமானம் அந்த கிராமத்தில் அவர்கள் வாழ்வதற்கு போதுமானதாகவே இருந்திருக்கும். ஆனால் அந்த பழக்கத்தை ஏனோ அவரால் நிறுத்தவே முடியவில்லை. இதனால் பல இடங்களில் கடன் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக பேரும் கெட்டுப் போக, வீட்டில் உலை கொதிக்க, அவர்களின் கடைசி மகன், படிப்பினை பாதியிலேயே விட்டு விட்டு, ஏதேனும் வேலைக்கு செல்லும் கட்டாயம்.

பத்தாவது கூட முடிக்காத அந்த சிறுவனின் முதுகில் முழு குடும்பச்சுமை. ஏதோ ஒரு வேலை என்று எங்கெங்கோ முட்டி மோதி அவனுக்கு கடைசியாக கிடைத்தது உரம் விற்கும் கடையில் உரம் அள்ளி அளந்து போடும் வேலை தான். என்ன தான் கைகளில் polythene உறைகளை போட்டு பயன்படுத்தினாலும், அந்த உர நெடியும், கை கால்களில் நாள் முழுதும் பட்ட உரத்தின் வேதிப் பொருட்களும், அந்த பிஞ்சு கரங்களை பதம் பார்த்தன. வீட்டில் அதை தெரியப்படுதினால், வேலைக்கு போவதை தடுத்து விடுவார்கள் என்று பயந்து, பல நாட்களாக அவர்களின் கண்களுக்கு மறைத்து அந்த சிறுவன் ஏதேதோ நாடகம் ஆடி தப்பித்துக் கொண்டிருந்தான். ஆள் இல்லாத நேரங்களில், கரண்டியால் சாப்பிட்டாலும், எல்லோர் முன்னிலையிலும் அப்படி சாப்பிடுவது அவனை அவனே காட்டி கொடுப்பது போலாகிவிடும் என்பதால், எல்லோரும் இருந்தால் சாப்பிடுவது கிடையாது என்ற கொள்கைக்கு தள்ளப்பட்டான். சோகத்தை பாருங்கள்.  நம் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சாப்பிட உழைக்கும் நம்மில் பல பேருக்கு இப்படி தான், குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடாமல் இருக்க ஏதோ ஒரு காரணம் வந்து விடுகிறது.

அப்படி பல நாட்களாக, பெரும்பாலும் பல இரவு நேரங்களில் பட்டினி கிடந்த அந்த சிறுவனின் மன நிலையை அறிந்த அவன் தோழி ஒருத்தி உண்டு. அவள், அவர்களின் வீட்டிற்கு தெரியாமல், அவனை இரவில் சந்திப்பதும், அவன் பிஞ்சு கைகளுக்கு மயிலிறகால் மருந்து போட்டு, அவன் கைகளை மட்டுமல்லாது அவன் மனதையும் வருடி, அவனுக்கு தினமும் ஊட்டி விட்டு அவன் மனதுக்கு தைரியம் கொடுத்ததும், நாளடைவில் அவனால் நல்ல உத்தியோகத்திற்கு செல்ல முடியும் என்று ஆறுதல் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக, அந்த இறக்கம், காதலாக மாறி, அவனையே திருமணமும் செய்தாள். இன்று அவன் ஒரு மகிழ்வூந்துக்கு சொந்தக்காரன். ஓட்டுனராக பணி. இரவு பகல் பார்க்காமல் உழைத்து, களைத்து திரும்பும் அவனின் பசி பொறுக்காது, பாதி இரவானாலும், அவன் வருகைக்கு காத்திருந்து, அவன் பசியாற்றி விட்டு அதற்கு பின் தூங்குகிறாள் அவள். அவள் என் உடன் பிறந்த அக்கா. தான் எங்கு வேலை செய்கிறோம், என்ன வேலை செய்கிறோம் என்று சொல்ல முடியாமல், உழைத்து வந்த பணத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக சாப்பிடாமல் பசியோடிருப்பது எவ்வளவு கொடுமை.

டிகிரி முடித்து கணினி படிப்புக்காக சென்னை ராயப்பேட்டையில், மேன்ஷனில் தங்கியிருந்த நேரம். வேலைக்கு செல்லாமல், படிகிறேன் பேர்விழி என்று ஊரை ஏமாற்றி, தெண்ட சோறு என்று பட்டத்தில் இருந்து தப்பிக்க, ஏதோ ஒரு கணினி படிப்புக்கு சென்னையில் அடைக்கலம் புகுந்த காலம். படிக்கிறேன், பின்னாளில் லட்சம் லட்சமாக வாங்குவேன் என்று என் போல் பலரும் அவர்கள் பெற்றோரையும், அவர்களையுமே ஏமாற்றி நாட்களை கடத்திய காலம். சென்னையில் மேன்ஷனில் தங்கி கொண்டு, இரண்டு மணி நேரம் கணினி வகுப்புக்கு போவதும், மற்ற நேரங்களில் வேலை தேடும் படலமாக, ஊர் சுற்றுவதையுமே வாழ்க்கையாக கொண்டிருந்த காலம். என்னை போல் பலர் அந்த புறா கூண்டில் அடைக்கலம் புகுந்திருந்தனர். எனக்கு பரவாயில்லை. மாதமானால் பணம் வந்து விடும். நான் சென்று அப்பாவை பார்க்காவிட்டாலும், அவராகவே வந்து என்னை பார்த்து விட்டு, பணம் கொடுத்துவிட்டு, "வேலை எல்லாம் இப்போ தேடாதே... இப்போது உன் கவனம் படிப்பதில் மட்டும் இருக்கட்டும். பிறகு வேலை தானாக தேடி வரும்" என்று ஆறுதல் சொல்லி விட்டு போவார். மாதம் ஒரு முறை நான் ஊருக்கு போய் வரலாம் தான்... ஆனால்.. வேலையில்லாமல் வீட்டிற்கு செல்ல என்னவோ போலிருந்தது. அப்பாவும் அதை புரிந்தவராக, மணியார்டரிலோ, அல்லது நேரிலோ மாதம் தப்பாமல் பணம் அனுப்பி வந்தார். என்னோடு தங்கியிருந்த பல பேருக்கு இப்படி ஒரு நல்ல அப்பா வாய்க்காதது அவர்களுக்குள் ஏக்கத்தை கொடுத்தது.

என்ன தான் அப்பா மாதாமாதம் பணம் அனுப்பினாலும், அதை அளவறிந்து வாழும் நல்ல பையனாக நானில்லை. மாத ஆரம்பத்தில் சினிமா, பத்திரிக்கை, ஒலி நாடா, வாழ்த்து அட்டை என்று ஏதாவது வெட்டி செலவு செய்வதும், பின் மாத இறுதியில், பணமில்லாமல் தவிப்பதும் என்ற பேச்சிலர்களுக்கே உரித்தான பழக்கத்தை தான் நானும் பின்பற்றினேன். சொல்லாமல் கொள்ளாமல் மக்கள் மேன்ஷனை காலி செய்து ஓடிவிடுவதால், அங்கே வந்து உணவு தரும் ஷர்மா என்பவரும் தினந்தோறும் பணம் வாங்கி சப்பாத்தி வழங்குவதும், குறிப்பாக இருபது தேதிகளுக்கு மேல் கட்டாயமாக கடன் கிடையாது என்று திட்டவட்டமாக பின் பற்றியிருந்தார். அந்த மேன்ஷனிலேயே பணக்கார பையன் நான் தான். அதாவது, இருபது தேதிகளுக்கு மேல் பணமிருப்பது என்னிடத்தில் மட்டும் தான். அதுவும் இழுத்து பிடித்து, அடுத்த மாதம் ஐந்து தேதி ( முதல் வார சனி ஞாயிறு) வரை ஓட்டிவிடும் வசதியானவன். மற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், 20லிருந்து ஆரம்பமாகும் பட்டினி போர். நானும், ரமேஷ் என்பவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எதிர் அறையில் அன்வர். அவரும் ராயப்பேட்டை நியூ காலேஜில் படித்துக்கொண்டு, இதே போல் வாழ்பவர் தான். ஏதோ ஒரு நாள் ( அநேகமாக இந்த 20 லிருந்து 5க்குள் )அன்வர் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பதாகவும், என்னிடம் 20 ரூபாய் கிடைக்குமா என்று ரமேஷ் கேட்டார். கையிலிருந்த 50 ரூபாய்க்கு மூன்று பேரும் காலை உணவு சாப்பிட்டோம். அந்த நாள் மதியம் விட்டு, இரவு பசித்து,  சாப்பிட போகலாம் என எண்ணும் போது தான் என்னிடம் வேறு பணம் இல்லாதது ஞாபகம் வந்தது. ஒருவர் பட்டினி போய், இப்போது மூவரும் பட்டினி. அடுத்த நாள் மாலை ஏழு மணிக்கு தான் எனக்கு கணினி வகுப்பு. அங்கே நண்பர்களிடம் கேட்டு, நாளை இரவிலிருந்து சாப்பாடு சாப்பிட முடியும். ஆனால் இன்று இரவு, நாளை பகல், மதியம் என நினைக்கும் போதே பசி இன்னும் அதிகமானது. பசியோடு அந்த இரவை தத்துவ பாட்டு, காதல் சோக பாட்டு என பாட்டு பாடி, பின்னிரவு வரை பேசி, சிலாகித்து கடத்தி விட்டோம்.

மறுநாள் 8 மணிக்கே பசி தூங்கவிடாமல் எழுப்பி விட்டது. இதோ அதோ என்று எப்படியோ மதியம் வரை தள்ளி விட்டோம். இப்போது ரமேஷ்க்கு மயக்கம் வரும் போலிருக்கிறது என்கிறார். அன்வர் செய்வதறியாமல் படுத்து விட்டார். கையில் வேலைக்கு செல்லும் பெண் தோழி ஒருவரின் அலுவலக தொலைப்பேசி எண் இருந்தது. ஆபத்துக்கு பாவமில்லை என்று மேன்ஷனில் கடன் சொல்லி அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க, அவர், மாலை வந்து தந்தால் போதுமா என்றார். சரி வெட்கம் பார்ப்பது இப்போது விவேகம் அல்ல என்று இருக்கும் நிலையை எடுத்து சொன்னேன். நீ போனை வை. நான் வருகிறேன் என்று என்னை மேற்கொண்டு பேசவிடாமல், அடுத்த 30-ஆவது நிமிடத்தில் அங்கே இருந்தார். தன் மதிய உணவை ரமேஷுக்கு கொடுத்து விட்டு, அன்வருக்கும், அவருக்கும் தலா 200 ரூபாய் கொடுத்து, என்னை அவர் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் வீட்டுக்கு கூட்டிப்போய், தயாராக இருந்த மாவில் தோசை வார்த்து கொடுத்தார். ஏனோ சாப்பிடும் போது தொண்டை அடைத்து, கண்ணில் நீர் முட்டியது. சாப்பிட்டு முடித்த பின், இனி எப்போதும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது, எப்போது பணம் வேண்டுமானாலும் தன்னை கேட்க என்னிடம் உறுதி எடுத்துக்கொண்டார். மாத இறுதியில் இவ்வளவு பணம் எப்படி என்றேன். தன் மோதிரத்தை அடகு வைத்து பணம் வாங்கி வந்ததாக சொன்னார். இன்னமும் அவர் கையால் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அன்று எனக்கு பசியாற்றியவர் தான், எனக்கும், என் பிள்ளைக்கும் அம்மாவாய் பசியாற்றுகிறார். என்ன ஒன்று... இன்றளவிலும் எங்களின் பெரும்பாலான நகைகள் அடமானத்தில் தான் உள்ளது. யாராவது நகை எங்கே என்று கேட்டால், சர்வீசுக்கு போயிருக்கு என்று சர்வ சாதரனமாக சொல்லி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

வீட்டில் அமாவாசை, சஷ்டி, கிருத்திகை என்று மாதத்தில் ஆறேழு நாட்கள் அம்மா, அப்பா என அனைவரும் விரதம் இருப்பார்கள். மற்ற நாட்கள் போல் அல்லாமல், விரத நாட்களில் அம்மா துவைத்து, குளித்து அதற்கு பின் தான் சமைக்கவே ஆரம்பிப்பார்கள். சின்ன பிள்ளை பசி தாங்க மாட்டான் என்று, எப்போதும் நமக்கு தனி சலுகை. காலையிலேயே ஏதேனும் சிற்றுண்டி வந்துவிடும். அதுவரை அடைத்து வைத்த பசி, அப்பாவுக்கு அதைப் பார்த்த மாத்திரத்தில் அதிகமாகி விடும். மேலும் அப்பாவுக்கு சர்க்கரை (இனிய அப்பா இல்லையா... அதனால் தானோ என்னவோ). சர்க்கரை இருப்பது தெரிந்ததிலிருந்து நேரத்திற்கு சாப்பிடவில்லை எனில் கொஞ்சம் பயந்து விடுவார். ஆனாலும் இந்த விரதங்களை விட்டார் பாடில்லை. அப்படி விரத நாட்களில் பெரும்பாலும் பசி பொறுக்காது கடைசியில் சண்டை தான். எவ்வளவு முயன்றும் அம்மாவால் பன்னிரெண்டு மணிக்கு முன் சாப்பாடு போட முடியாது. அதற்கு காரணம், அம்மா ஒருவராகவே தான் அடுக்களையில் அல்லாடுவார். நானோ, அப்பாவோ ஒரு துரும்பைக் கூட தள்ளி வைத்தது கிடையாது. விரதம் என்பதால், விதவிதமாக சமைக்க வேண்டும். வடை, பாயசம், அகத்தி கீரை, கூட்டு என்று ஒவ்வொரு விரதத்திற்கும் ஏதோ ஒன்று விசேஷமாக செய்தாக வேண்டும். எல்லாம் சேர்த்து நேரத்தை இன்னும் நீடித்து விடும். அப்போது அப்பா பசியால் துடிப்பதையும், செய்வதறியாமல் அம்மாவை விரட்டுவதையும் பார்க்க தமாஷாக இருக்கும். இவ்வளவு பசி பொறுக்காதவர், விரதம் இல்லாமல் போனால் தான் என்ன என்று அம்மா கேட்டால், அமைதியாகி விடுவார்.

சில நேரங்களில் அப்பா கொஞ்சம் ஓவராக சீன் போடுவதாக தோன்றும். கண்கள் மூடி, வாயை இரு கை கொண்டு மூடி, வெற்றுடம்பில் விட்டம் பார்த்து நெடுஞ்சானாக படுத்து கிடப்பார். அம்மாவும் நானும் கண்களால் அதை காட்டி, எங்களுக்குள் சிரித்துக் கொள்வோம். சில நேரங்களில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பார். சாப்பாடு தயார் என்ற பிறகு தான் பல் துளக்கவோ, குளிக்கவோ செல்வார். காரணம் கேட்டால்... பல் துலக்கி விட்டால், விரதம் முறித்து ஏதாவது சாப்பிட்டு விடுவேன் என்று குழந்தைப் போல் காரணம் சொல்வார். அடுத்த 5 நிமிடத்தில் நெற்றியில் பட்டையிட்டு, சாமி படங்கள் முன் மனமுருக மந்திரங்கள் (சஷ்டி கவசம்) முனுமுனுத்தும், சில வேலைகளில் கண்களில் நீர் பெருகவும் கும்பிட்டு, அழுகையை அடக்கமாட்டாமல் அடக்கி, தீபாரதனை காண்பித்து பின் படையளில் உட்காருவார். இவ்வளவு பசி தாங்காதவரா என்று இருக்கும். நான்கு தம்பிகளோடு பிறந்து, அரிசி சோறினையே திருமணத்திற்கு பின் பார்த்து, அதற்கு முன் அரை வயிறும், கால் வயிறுமாக சென்று, தான் ஒருவன் மட்டும் படித்து, அரசு பணியில் சேர்ந்து, தனி ஒருவனாக அந்த குடும்பத்தையே வழிக்கு கொண்டு வந்து, திருமணமான பின், படிப்பு ஒன்று தான் முன்னேற்றத்திற்கு வழி என்று உறுதியாக நம்பி, தனக்கு பிறந்த நான்கு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து,  பசியின் சுவடே தெரியாமல் வளர்த்த அவர் பிள்ளைகளான எங்களுக்கு அவரின் பசி புரியாதது தான்.

திருச்செங்கோட்டில் கணினி ஆசிரியராக பொறுப்பேற்று, தனி ஒருவனாக வாடகைக்கு ஒரு ரூம் பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாக வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டிருந்த நேரம். நான்கு இலக்க சம்பளமானாலும், முதல் மூன்று தேதிக்குள், டான் என்று வங்கி கணக்கில் வந்து விழும்போது, பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகும். கைப்பேசி வைத்திருப்போர், கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டிருந்தனர். மக்களின் வாழ்க்கை முறையை தொழில் நுட்பம், தன் பக்கம் வளைத்து போட்டு, அவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், படித்து, வேலையில் அமர்ந்து, புதிதாக பணத்தை பார்க்கும் என் போன்ற இளைஞர்களை, இழுத்து போட்டு, செலவு சக்கரங்களின் பல்லிடுக்கில், எங்களையும், எங்கள் தேவைகளையும் ஒரு சேர நசுக்கிக் கொண்டிருந்தது. சிக்கனமாக வாழ்ந்திருந்தால், திருச்செங்கோட்டில் ஒரு சின்ன மனைக்கூட வாங்கியிருக்கலாம் தான். ஆனால் அப்போது சிக்கனத்திற்கு எந்த 'ன' என்று கூட தெரியாமல் வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு பணம் அனுப்பத் தேவையில்லை...உன் தேவைகளை நீ பார்த்துக் கொள் என்று அப்பா சொல்ல, அவர் சொன்ன வேறெதையும் கேட்காமல், இதை மட்டும் வேத வாக்காக எடுத்துக் கொண்டேன். தனியறை என்பதால், அவ்வப்போது நண்பர்கள் வருவதுண்டு. கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பனும், திருச்செங்கோட்டிலேயே இருப்பவனுமான, நீண்ட நாட்கள் தொடர்பில்லாத நண்பன் ஒருவன், திடீரென என் விலாசம் விசாரித்து வந்து பார்த்தான். அவன் நல்ல புத்திசாலி. ஆனால் காலம் அவன் புத்திசாலி தனத்திற்கு எல்லாம் செவி சாய்க்காத நாட்கள். வாழ்க்கை அவனை ஓடித்து போட்டு இருந்தது. மச்சான் நான் உன் ரூமில் கொஞ்ச நாட்கள் தங்கிக் கொள்ளட்டுமா என்றான். அதே ஊரில் வீடு இருந்தும் அவன் அப்படி கேட்டது வியப்பாக இருந்தது. ஏன்னு அப்பறம் சொல்கிறேன்...இப்போ சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுக்கிறாயா என்றான்.

சொந்த வீடு போல் எப்போது வேண்டுமானாலும் சென்று சாப்பிடும்படியாக என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மெஸ் ஒன்று இருந்தது. அங்கே அக்கவுண்ட் வைத்து சாப்பிட்டு, மாதாமாதம் பணம் செலுத்துவது வழக்கம். அங்கு சென்று சாப்பிட்டோம். அவன் கேட்காமலே, அவனுக்கு பிடித்த ஆஃப் பாயில் சொன்னேன். (கல்லூரி நாட்களின் ஞாபகம்). ஆஃப் பாயில் வந்தது தான் தாமதம்... அதுவரை அடைத்து வைத்த கோவம், இயலாமை, ஆற்றாமை, என எல்லாம் சேர்ந்து வெடித்து அழுகிறான். என்ன ஆயிற்று என்று கேட்டால், தன் சொந்த வீட்டில் வேலைக்கு செல்லாததால், உணவு போடவில்லை என்றும், அவனாக சொந்த தொழில் (கோழி பண்ணை) செய்ய, அவன் பெற்றோர் கொடுத்த பணத்திற்கு அவனால் வட்டி செலுத்த முடியாததால், அவனை பணமில்லாமல் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொன்னதாகவும், போக்கிடம் தெரியாமல், அங்கிருந்த மலை கோயிலில் இரண்டு மூன்று நாட்கள் கிடந்ததையும், ஒவ்வொரு நண்பர்களாக தேடி பிடித்து உதவி பெறவும், வேலைக்கு ஏற்பாடு செய்யவும், எந்த வேலையானாலும் செய்ய தயார் என்றும் சொன்னான். சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதாகவும், எந்த நண்பனும் உதவி செய்யும் நிலையில் இல்லாததையும் சொல்லி அழுதான். கல்லூரி காலங்களில் இருக்கும் பணத்தை round off செய்ய, ஓரிரு உபரி ஆஃப் பாயில்கள் சாப்பிட்டது அப்போது அவனை உறுத்தியதா, அல்ல, இவன் என் நண்பன், இவன் எப்போது வந்தாலும், இவன் சாப்பிட்டிற்கு என் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் என்று நான் சொன்னதா? ஏதோ ஒரு நண்பன், உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து, உனக்கு வேலை கிடைக்கும் வரை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நீ இங்கேயே தங்கலாம், என்று நான் கொடுத்த நம்பிக்கையா எது என்று தெரியவில்லை. அவன் அத்தனை கேவல்களையும் அன்று தான் பார்த்தேன். கல்லூரியில் மட்டுமே அவனை பார்த்த, அந்த சிரித்த முகத்திற்கு, அவ்வள்வு பாவமாக அழத்தெரியும் என்று கனவிலும் யோசித்தது கிடையாது.

அவனின் ஆற்றாமை என்னையும் அழ வைத்தது. அதற்கு பின் அவனோடு தொழில் தொடங்கிய மற்றொரு கல்லூரி நண்பனும் வந்து என் அறையிலேயே தங்கினான். அவனுக்கு அரியர்ஸுக்கு படிக்க இடமில்லை. வீட்டில் விரட்டியடித்தால் எங்கிருந்து படித்து அரியர்ஸை முடிப்பது என்று அவன் பெற்றோர்களுக்கு தெரியவில்லை. இருவரும் என் அறையில் அதிக பட்சம் மூன்று மாதங்கள் தான் இருந்திருப்பார்கள். அங்கிருந்து இருவரும் வேறு நல்ல வேலை கிடைத்து, அதன் பின் தான் அவர்களின் சொந்த வீட்டிற்கு சென்றார்கள். முதலாமவன் இப்போது அதே ஊரில், அரசு பள்ளியில் ஆசிரியர். கணக்கு பாடம் என்பதால் டியூஷனுக்கும் குறைவில்லை. இரண்டாமவன், கோயம்புத்தூரில் நல்ல ஆடிட்டரின் ஒருவரின் ஆஸ்தான கணக்கர். ஆனால், அந்த மூன்று மாதங்களுக்கு முந்தைய மூன்று நாட்களின் பசி. அது உருவாக்கியிருந்த வடு, என் நெஞ்சை விட்டே மறையாத போது, அவர்களால் மறக்க முடியுமா என்ன.

காத்தாடிக்கு என்ன றெக்கையா இருக்கிறது? காற்றோடு காற்றாக பறக்கவில்லையா? அப்படித்தான், கணினி தொழில் நுட்பமென்னும் ஆடி காற்றை பிடித்துக் கொண்டு, இதோ ஆறு இலக்க ஊதியத்தை எட்டியாகி விட்டாச்சு. பசி என்ற ஒரு உணர்வையே மறந்தாகி விட்டது. பசிக்கிறதோ இல்லையோ, மணி அடித்தாற் போல் சாப்பாடு நேரத்திற்கு கிடைத்து விடுகிறது. வயிற்றுக்கு சாப்பிட்டது போக, இப்போது நாக்கிற்காக சாப்பிடும் வாழ்க்கை. நடைப்பாதையில் நலிந்தோர் பார்த்தால், பிட்டி பீப்புள் என்று மகள் பரிதாபம் கொண்டு உணவு வழங்குகிறாள். நமக்கு வேண்டாமென்பதை அவர்களுக்கு கொடுக்க கூடாது, அவர்களுக்கு வேண்டியதை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று, மீதமானதை கொடுக்காமல், அவர்களுக்கு என்று வாங்கி கொடுக்குமளவு மனைவியும் என் குழந்தையை பக்குவப்படுத்துகிறாள். எதிர்காலத்திற்கு வேண்டி, மனை வாங்கி வீடு கட்டி, சம்பளத்தின் பெரும் பகுதியை வீட்டு லோன் விழுங்கிக் கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் எங்கள் தேவைகளை பெருக்கிக் கொண்டு, அதை ஈடு செய்ய, ஊரை விட்டு ஊர் சென்றோ, ஆன்சைட் (வெளி நாடுகளுக்கு சென்று செய்யும் வேலை) வேலைக்கோ அலைந்து, கிடைக்கும் extra வருமாணத்திற்காக ஓடுவதாகிவிட்டது. அம்மா, மனைவி, மகள் என்ற மூன்று தலைமுறை பெண்களை தனியே விட்டுவிட்டு, கிடைக்கும் வாய்ப்புகளில் வெவ்வேறு பெரு நகரத்திற்கு சென்று பிழைக்கும் executive வாழ்க்கை. இப்போதெல்லாம், பெரும்பாலும் பேச்சிலர் வாழ்க்கை தான்.

அப்படி இரண்டு ஆண்டுகளாக, மும்பை அடுக்கு மாடி பகுதிகளில் தங்கி, உணவகங்களில் மட்டும் உண்டு வாழும் வாழ்க்கை. விதவிதமான ரொட்டிகள், புரோட்டாக்கள், பிரியாணி, சாட் அயிட்டங்கள் என எல்லாம் கிடைத்தாலும், தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிய சாப்பாடு போல் ஃபுல் மீல்ஸ் கிடைக்காத ஒரு நகர, நரக வாழ்க்கை. அங்கே சுற்றி, இங்கே சுற்றி, ஏதோ ஒரு கேரளா உணவகம் ஒன்றை கண்டுபிடித்து, அதில் புதன் கிழமை மதியம் மட்டும் தான் சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்தது. ஆனால் புதன் கிழமை மதியங்களில், வேலை நாட்களாக இருந்ததால், அலுவலகம் விடுத்து செல்ல இயலாத நிலை. ஒரு புதன் கிழமை ஆயுத பூஜைக்கு அலுவலகம் விடுமுறை விட, அன்று காலை சாப்பிடாமல், நேராக மதியம் சென்று, சாப்பாடு சாப்பிடுவது என்று முடிவு. மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அம்மா, சாப்பிட்டாச்சா என்று கேட்க, காலை உணவு தவிர்த்து, மதியம் நேரடையாக மீல்ஸ் சாப்பிட போகப்போவதாக சொல்ல... சரி சாப்பிட்டுவிட்டு சொல்லு, நாங்கள் சாமிக்கு படைத்து விட்டு சாப்பிடுகிறோம் என்றார். ஒரு மணிக்கு அந்த உணவகத்தை அடைந்தால், சாப்பாடு முடிந்து விட்டதென்றும், சற்று தொலைவில், இன்னொரு கேரளா உணவகம் இருப்பதாகவும் சொல்ல, அங்கே போக, அங்கேயும் இல்லை. அவர் இன்னொரு இடம் சொல்ல... இப்படியாக மணி மூன்று வரை சோறும், சாம்பாரும் சாப்பிட, ஒவ்வொரு இடமாக பந்தாடப்பட்டோம்.

அதற்கு மேல் அலைய தெம்பில்லாமல், சரி ரொட்டியே சாப்பிடலாம் என முடிவு செய்து, உணவகத்தில் காத்திருக்கிறோம். அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்து கைப்பேசி சினுங்கியது. முதல் வார்த்தையாக, கண்ணு, சாப்பிடியா என்று கேட்க, நானும் எத்தேட்சையாக, எங்கு தேடியும் சோறு கிடைக்கவில்லை, கடைசியில் இப்போது ரொட்டி சாப்பிட காத்திருக்கிறேன் என்று சொன்னது தான் தாமதம்... மறுமுனையில் அம்மா வெடித்து அழுகிறார். அம்மாவின் அழுகை ஆற்ற முடியாமல், ஏனம்மா அழறீங்க, அது தான் சாப்பிட போகிறோமே என்று கேட்க... உன் சம்பாதியத்தில் எங்களுக்கு தேவையானவற்றை செய்து சாப்பிடுகிறோம்... உனக்கோ, உன் தேவைக்கு, இந்த ஒரு நாளைக்காவது சோறும், சாம்பாரும் கிடைத்திருக்கலாம்... பிடித்ததை சாப்பிட முடியாமல், எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்? நீ ஊருக்கு வா கண்ணு என்றார். ஏனோ அவ்வளவு பசியிருந்தும், ஆர்டர் கொட்டுத்த ரொட்டியை கேன்சல் செய்து விட்டு, சாப்பிட பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தேன். வளர்ந்து விட்ட பிறகு, அம்மாவை தவிர வேறு யாரும், நம்மிடம் சாப்பிட்டாயா என்று கேட்பது இல்லை. சக மனிதன் பசியில் இருக்கிறானா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கூட ஆர்வமில்லாதவர்களாகி விட்டோம். சம்பிரதாயத்திற்கு எப்படி இருக்கிறோம் என்று வினவ ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், நாம் சாப்பிட்டோமா?, பசியின்றி இருக்கிறோமா என்று கேட்கும் தாயுள்ளங்கள் இப்போதெல்லாம் அறிதாகிக் கொண்டே தான் வருகிறது. தொப்பையை குறைக்க இரவில் பட்டினி கிடப்பது, ஜீரண சக்தியை மேம்படுத்த, சிறு சிறு அளவுகளாக ஒரு நாளைக்கு ஆறு முறையோ, ஒன்பது முறையோ உண்பது என, பசிக்காக உண்பது மறந்து எதுஎதற்காகவோ சாப்பிட ஆரம்பித்து விட்டோம். ஆனால் எவ்வளவு வளர்ந்தாலும், பசி தன் சுய முகத்தை நம்மிடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

பதினைந்து வருடத்திற்கு ஒரு முறை விகிதம், இந்த வருடமும், வானம் கிழிந்து, தன் சல்லடை ஆடை வழியே,சற்று அதிகமாகவே அழுது தீர்த்தது. சென்னை முழுதும், சிறு சிறு தீவுகளாக துண்டிக்கப்பட்டது. தீபாவளி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மழை பெய்தபடி இருக்க, புறநகர் பகுதியில் பெரும்பாலான வீடுகளில், முதல்மாடி வரை நீர் புகுந்து விட்டிருந்தது. மக்கள் 5 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர இயலாமல், வீட்டில் உள்ளதை சாப்பிட்டு, சற்று உயரமான பகுதியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கோ, அல்லது தங்கள் சொந்த ஊருக்கோ சென்று விட்டிருந்தனர். இதில் பாவப்பட்டது, அந்த புற நகர் பகுதியில், வேலை நிமித்தமாய் வந்து தங்கியிருக்கும் பேச்சிலர் ஆண்கள் தான். சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், மெஸ்ஸிற்கும், உணவகத்திற்கும் செல்ல முடியாமல், வீட்டிலும் சமைக்க ஏதுமின்றி வாங்கி வந்த ரொட்டிகளையும், பிஸ்கட்டுகளையும் முதல் இரண்டு நாட்களில் தின்று தீர்த்தனர். அதற்கு பின்னும் தொடர்ந்த மழையால், வெளியே செல்ல வழியின்றி, உண்ண ஏதுமில்லாமல், போக்கிடம் அற்று, மூன்று நாட்களுக்கு மேல், மொட்டை மாடியில், உணவு பொட்டலத்திற்கு காத்து கிடக்கின்றனர்.

அதில் ஒருவர் முக நூலில்( FaceBook ) அழுது எழுதியிருந்தார். தான் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை செய்வதாகவும், மாதம் ஆறு இலக்க ஊதியம் வாங்குவதாகவும், சென்னை புற நகர் பகுதியில் ஒரு மூன்று பெட் ரூம் (3BHK) வீடு வாங்கியிருப்பதாகவும், வங்கி கணக்கிலும் ஆறு இலக்கம் இருப்பதாகவும், நான்கு சக்கர வாகனம், இரண்டு கடனட்டை என சகல வசதிகள் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். நேற்று வரை அவரின் கவலை, அலுவலகத்தில் அடுத்து தரப்போகும் ஊதிய உயர்வு பற்றி இருந்ததாகவும், ஆனால், தற்போதோ, நீர் சூழ்ந்த அவர் வீட்டிலிருந்து அவரை மீட்க ஆள் வேண்டியும், மூன்று நாட்களுக்கு பசியோடிருக்கும் தனக்கு, மொட்டை மாடியில், ஏதேனும் உதவி எலிக்காஃப்டர் வந்து, உணவு பொட்டலம் போடாதா என்று பாத்துக் கொண்டிருப்பதாகவும் எழுதியிருக்கிறார். பாவம். நிலையே இல்லாத இந்த மனித வாழ்வில், பசியை தவிர எதுவும் நிலையில்லை என்னும் பாடத்தை, இந்த அடர் மழை கொஞ்சம் காட்டமாகவே அவருக்கு அடித்து சொல்லி தந்திருக்கிறது.

பசித்த போது உணவில்லாமல் அலைந்தவர்களுக்கு எல்லாம், அடுத்தவனின் பசி பற்றி அக்கறை வந்துவிடும். அடுத்தவரைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் போனாலும், குறைந்த பட்சம், நம் அன்புக்குரியவர்களையாவது சாப்பிட்டார்களா என்று தெரிந்து கொண்டு, அவர்களின் பசியாற்றுவோம்...

கூடி உண்டு கூடி களி(ழி)த்தலன்றி, வேறேது பெருவாழ்வு.

வரலாறு முக்கியம் அமைச்சரே

ஒவ்வொரு கால கட்டத்திலும், நம்மை ஏதோ ஒன்று வசியப்படுத்துகிறது. ஏதோ ஒன்றின் மேல் அதிக நாட்டம் கொள்கிறோம். ஆனால், ஏதோ சிலவற்றின் மேல் மட்டும், எப்போதும் நம் பிரியம் குறைவதே இல்லை. ரயில் பயணம், பட்டாம்பூச்சி, மல்லிகை பூ, மழைச்சாரல், மண் வாசம் என்று ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு பட்டியல். அந்த பட்டியலில் எங்கள் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களின் பட்டியலின் இன்றளவும் ( 25 ஆண்டுகளுக்கு பிறகும்) நீங்காத இடம் பிடித்திருப்பது வரலாறு (வரலாறு முக்கியம் அமைச்சரே). இன்றளவும் வரலாற்று திரைப்படங்களை தேடி தேடி பார்க்க வைப்பதும், வரலாறு புத்துகங்களை வாசிக்க வைப்பதும் என எங்களை வரலாறு வசீகரக்க செய்ததன் முதல் படி, எங்கள் வரலாறு வகுப்பறை தான். இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் ( சரித்திர நாயகி ), இன்று எங்கள் வரலாறு ஆசிரியை பிரபா மேடமின் பிறந்த நாள்.

மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் சுஜாதா... மதன் வரலாறு ஆசிரியராக இருந்திருந்தால், எல்லா மாணவர்களும் சரித்திர பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருப்பார்கள் என்று எழுதியிருந்தார். அதை படிக்கும் போது, பிரபா மேடம் எழுதியிருந்தால், வந்தார்கள், வென்றார்கள் போல பல நல்ல சரித்திர புத்தகம் நமக்கு கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. பாகுபலி திரைப்படம் பார்த்து மெச்சிய மக்களிடையே, பிரபா மேடம் பாடம் நடத்தும் போது, எங்களின் மனதில் ஓடிய visual-களை ஈடு செய்ய இயலவில்லை என்றே தோன்றுகிறது. சாண்டில்யனோ, கல்கியோ, போர் தந்திரங்களை விவரிக்கும் போதும், வியூகங்களை விளக்கும் போதும், மனதில் படமாக பார்க்க எங்களை அன்றே அவர் பழக்கியிருந்தார்.

ஒவ்வொரு போர் வியூகங்களும் இன்றும் ஞாபகம் இருக்கிறது. போர் விதிகளை மீறி, கொரில்லா தாக்குதல் நடத்தி வென்ற முகலாய கதைகளையும், யானையின் மென்மையான பாதங்களுக்கு முள் உருண்டை அனுப்பி போர்களை வென்றதும், கலிங்கம் முடிந்து, புத்த பிக்ஷுவாக மாறியதும், இன்றளவும் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.  "இந்திரபிரஸ்தா" என்று டில்லியை அவர் கூறியதும், அங்கிருந்து கலவாடிய பொக்கிஷங்களும், கோகிணூர் வைரம், peacock throne, என ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

வரலாற்றில் மட்டுமல்லாமல், நிர்வாகத் திறமையும், மாணவ மேம்பாடும், குடும்பத்தை பராமரிப்பதும் என அனைத்திலும் அவரால் எப்படி சிறப்பாக விளங்க முடிந்தது என்று இன்றும் வியப்பாகவே உள்ளது. இப்போது பக்தி மார்கத்தில், ஈசனை வழிப்படுவதிலும், அவன் புகழ் பரப்புவதிலும் அதிக ஆர்வம் கொள்வதாகவும் தெரிகிறது. அவர் போற்றும் அந்த சிவன், அவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும் தர வேண்டியும், அவர் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற அவருக்கு நேரத்தையும், சக்தியையும் தர வேண்டியும் பிரார்தித்து, எங்கள் அனைவரின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எங்களை பொருத்தவரை, எங்களின் அனைவரின் வரலாற்றிலும், தனக்கென ஒரு இடம் பிடித்த அவர், ஒரு வாழும் வரலாறு தான்.

மதனின் வந்தார்கள் வென்றார்கள்- அத்தியாயம் 3. பாடம் கேட்ட உங்கள் பழைய நினைவுகளை கிளர...சற்று பெரிய file தான். But worth downloading. Once again... Happy Birthday Prabha mam.