முன்பெல்லாம் நண்பர்களோடு விழுந்து விழுந்து சிரித்த பையன் தான், இப்போது கக்கத்தில் யாராவது கை வைத்து சிரிப்பு மூட்டினால் கூட சிரிப்பு வருவதில்லை. மனசு மறுத்துவிட்டது. அதை போல் தான் அதிர்ச்சிகளும்.
அப்படி மரமாகி விட்ட என்னை, சின்ன சின்ன சொற்தொடர்களில் களுக் கென சிரிக்க வைத்த ஒரு சிலரில் ராஜூ முருகனும் சேர்ந்து கொண்டார். வடிவேலு வின் ஒரு சின்ன முகபாவனை, கிரேஸி மோகனின் அன்டர்லைன்டு வோர்ட்ஸ் (முன்னாடி, பின்னாடி என்ன இருந்தது?), எழுத்தாளர் சுஜாதாவின் பகட்டு போல், ஏதேனும் சிலர் தான் இப்போதெல்லாம் என்னை களுக் என சிரிக்க வைக்கிறார்கள். ராஜு முருகன் எழுத்தில், வெள்ளை காமராஜர், கறுப்பு சே குவேரா என்றதுமே களுக்-கினேன். பின் ஆட்டோ டிரைவரின் அலட்டல் இல்லாத பிலாசபி பேச்சு, அட்ரஸ் கொடுத்த ஒரே காரணத்திற்காக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்ட அண்ணன் என சிரிக்க வைத்து, அதே நேரத்தில், தன் political satire களால், பொளேரென கண்ணத்தில் அறையவும் செய்கிறார். சில்க் சுமிதா வை, பல கோணங்களில் பார்த்து ரசித்த நம்மை, ஒரே ஒரு விஷுவலில் அவரின் வேறு கோணத்தை காட்டி, "அந்த அம்மா" என்று சில்க்-கை அவர் அழைத்ததை நம்மிடம் நியாயப்படுத்தியும் விடுகிறார். பல பல அதிர்ச்சிகள். பல பல உண்ர்ச்சிகள்.
அதிர்ச்சி சில நேரம் ஆழ் மனதின் ஓரம் வரை என்றும் இருந்து பாதிக்கும் என்பதை, தன் சின்ன மாப்பிள்ளையின் சித்திரம், சுப்ரமணியின் டெமக்ரான், ஸ்டெல்லா புரூஸ்- நடந்த திருவல்லிகேனி என எண்ணற்ற விஷுவல்களை, கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, நம்மையும் அந்த காலத்திற்கு அழைத்து சென்று அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
முந்திய பத்தியில் சிரித்து, இந்த பத்தியில் மனசை கனக்க செய்து, அடுத்த பத்தியில் அழவும் வைக்க, இன்னொரு ராஜு முருகன் தான் வேண்டும். அந்தந்த நேரத்திற்கு 'ஹார்ட் அட்டாக்' கொடுத்தாலும், சில அதிர்ச்சிகளை திரும்பி பார்ப்பதில் எந்த அதிர்ச்சியும் இருப்பதில்லை. அப்போது இருந்த மன நிலையில் மட்டுமே சில அதிர்ச்சிகள் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் சில அதிர்ச்சிகள் தங்கள் சுவடுகளை, வாழ்க்கையின் பயனத்தின் மீதே பதித்து, நம்மை வேறு திசை நோக்கி அல்லாடவும் செய்து விடுகின்றன.
எங்கள் வீட்டின் நடுகுட்டி கீதா அக்கா தான் நக்கீரர். தப்பு செய்வது அப்பாவானாலும், தன் சுடு சொற்களால் எரித்து விடுவார். நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் ( அதாங்க ஒயின் ஷாப்) கொஞ்ச நேரம் மூழ்கி கிடந்து விட்டு, எல்லோரும் தூங்கிய பின் வீட்டிற்கு வந்து, நல்ல பிள்ளையாய் படுத்து தூங்கிவிடுவார் அப்பா. மறுநாள் மீண்டும் அக்கா அப்பாவிடம் தன் கோபத்தை காட்டத் தொடங்கிவிடுவார்.
"கஷ்டத்த மறக்க குடிக்கணும்ன்னா, பொம்பளைங்க எல்லாம் வீட்டிலேயே காய்ச்ச வேண்டியது தான்... அவ்வளவு கஷ்டம் எங்களுக்கும் இருக்கு"
என வயது வித்தியாசம் பார்க்காமல் எகிருவார். பெரும்பாலும் இப்படி தவறுகளை தட்டி கேட்பவர்கள், தங்கள் பக்கம் வாதத்தை பலப்படுத்திக் கொள்ள பல துறைகளில் நாட்டம் கொண்டு, ஓரளவு தெரிந்தும் வைத்திருப்பார்கள்.
அப்போது நாங்கள் குடியிருந்த வீடு, ஒரு மேல்நிலை பள்ளியின் பின்புறம் இருந்தது. எங்கள் வீட்டின் பின் கதவுக்கும், அந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கும், ஒரு ஆறடி இடைவெளியும், ஒரு கம்பி வேலியும் போட்டிருப்பார்கள். ஒருமுறை பின் கதவு தட்டப்பட்டு அம்மா சென்று கதவை திறக்க, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு போலிஸ் அதிகாரி, அவர்களுக்கு பின்னால் ஒரு மக்கள் கூட்டம் என எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும் வீட்டின் கழிவு நீர் விளையாட்டு மைதானத்திற்கு வருவதாகவும், உடனடியாக கழிவு நீர், வீட்டின் முன்புறமுள்ள பாதாள சாக்கடையில் சேருமாறு குழாய் அமைக்கவும் மிரட்டிக் கொண்டிருந்தார்.
வாடகை வீடென்பதால், ஓனரிடம் சொல்லியிருப்பதாகவும், அவரும் வார இறுதிக்குள் செய்து விடுவதாகவும், அது வரை பொறுத்துக் கொள்ளுமாறும் அந்த அதிகாரியிடம் அம்மா கெஞ்சிக் கொண்டிருந்தார். அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், இப்போது உடனடியாக, ஒரு வாய்க்கால் மாதிரியாவது வெட்டி, உடனடியாக கழிவு நீர் வராமலிருக்க வழி செய்யுமாறு மிரட்டிக்கொண்டிருந்தார்.
"இல்லைன்னா அவ்வளவு தான் பார்த்துக்கோ..."
அம்மாவை அவர் கை நீட்டி மிரட்டியது தான் தாமதம், அக்கா திடுமென ஓடி வந்து பொறிந்தார்.
"ஹல்லோ மிஸ்டர்... முதலில் நீங்க யார்? என் அம்மாவை எந்த ரூல்ஸின் படி மிரட்டுறீங்க?"
"என்னம்மா எகிருற? நான் இந்த ஏரியா எஸ்.ஐ., போலீஸ எதிர்த்து பேசினன்னு உள்ள தள்ளிடுவேன் பார்த்துக்கோ.. மரியாதையா பேசு"
"எது? உள்ள தள்ளுவியா? நல்ல போலீஸா இருந்தா ஏன் சார் பின் வாசல் வழியா வரனும். லேடீஸ் குளிச்சிட்டு இருக்கும் போது பின் கதவ தட்டி கலாட்டா பண்ணினாருன்னு உன் மேல இப்பவே நானும் கேஸ் ஃபைல் பண்ண முடியும் பார்த்துக்கோ. கதவில் உன் கைரேகக் கூட இருக்கு"
எனக்கு பயங்கர அதிர்ச்சி... என்னை விட அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பெரும் அதிர்ச்சி...கதவின் மேலிருந்த கையை மெதுவாக எடுத்துக் கொண்டே..
"என்னம்மா என்னென்னமோ பேசற..சாக்கடை கிரவுண்டுக்குள்ள வருதேன்னு கேட்க வந்தா நீ என்ன இப்படி பேசுற?" என்று குரலை கொஞ்சம் தாழ்த்தி பேசினார்.
"சாக்கடை வருதுன்னா, முதல்ல பள்ளி நிர்வாகம் எங்களிடம் சொல்லனும், அப்ப நாங்க கேட்கலைன்னா, வக்கீல் வச்சு நோட்டீஸ் விடனும், அதுக்கும் நாங்க ஒத்து வரலன்னா, அந்த நோட்டீஸோட கடைசி தேதிக்கு, அப்புறம் உங்க கிட்ட க்ம்பளைண்ட் பண்ணினாங்கன்னா தான் நீங்க வரனும்... அப்பவும் முன் வாசல் வழியா தான் வரணும். இப்படி ரவுடி மாதிரி பின் வாசல் வழியா வந்து மிரட்டக்கூடாது.. நானும் லா ஸ்டூடன்ட் தான் பார்த்துக்கோங்க" என்று போட்டாரே ஒரு போடு...
அதிர்ந்து போன போலீஸ் மூவரும் ஒரு அடி பின்னே சென்று.. அம்மாவை நோக்கி..
"இந்தாங்கம்மா...நீங்க சொன்ன படி ஒரு வாரத்துக்குள்ள ஓனர்கிட்ட சொல்லி பைப் போட்டு, சாக்கடைய அனுப்ப சொல்லுங்க... நாங்க வர்ரோம்.". என்று சொல்லி கிளம்பிவிட்டார்கள்.
போகும் போது, அவர்கள் மூவரும் பின்னாலிருந்த பள்ளி சம்மந்தப்பட்டவர்களிடம்..
"சார்.. பார்த்தீங்கல்ல..அந்த பொண்ணு (என் அக்கா) சொன்னபடி செய்யுங்க... நாங்க எல்லாம் சும்மா இந்த மாதிரி விஷியத்திற்கு எல்லாம் வந்து மிரட்ட கூடாது சார். இதெல்லாம் நீங்களா பேசி முடிச்சிக்கணும்... அப்படி இல்லன்னா.. வக்கீல் கிட்ட போய், நோட்டீஸ் விட்டு...." அவர் ஏதேதோ பேசிக்கொண்டே போனார்... நான் என் அக்காவை பிரம்மிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். லா படிக்கவில்லையெனினும் அக்கா... விதி படத்தில் வரும் சுஜாதா வாக வக்கீல்கள் அணியும் கறுப்பு கௌனில் கற்பனை செய்து கொண்டேன். அந்த நிகழ்வுக்கு பின், இன்றும் அக்காவிடம் கொஞ்சம் அடக்கியே வாசிப்பேன்.
கல்யாண்ஜி-யின் கவிதை ஒன்று.
"வெது வெதுண்ணு இருக்கு"
தெரு ஓரச் செடி இலையைத்
தொட்டுச் சொல்லிவிட்டுப் போகிறது
காகிதம் பொறுக்கும் செம்பட்டை.
சரியாக சொல்பவர்கள் இப்படித்தான்
நிற்பதில்லை.
உடனே போய்விடுகிறார்கள்.
இந்த கவிதையின் அதிர்வை உங்கள் மனசால் உணர முடிகிறதா... இப்படி, சட்டென உண்மையை சொல்லிவிட்டு போன நம் நண்பர்களின் சொற்கள், இதே அதிர்வை மனதில் உண்டு பண்ணும் அல்லவா?
"டங்காமாரி ஊதாரி" பாட்டுக்கு ஆடும் தணுஷ் போல தான் இருப்பான் எங்கள் பண்ணையில் வேலை பார்த்த மல்லன். அவன் பெயர் ராமு. ஆனால் அவனை எல்லோரும் மல்லன் என்று தான் அழைப்பார்கள். முதல் மனைவிக்கு இரண்டு குழந்தை இருந்த போதும், இரண்டாம் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கும் ஒரு குழந்தை உருவாகியிருந்த சமயம் வீட்டிற்கு வேலை செய்ய இருவருமாக வந்திருந்தனர்.
"என்ன ராமு ( நான் மட்டும் அவனை ராமு என்று தான் கூப்பிடுவேன்), நாம பொழைக்கிற பொழப்புக்கு மூனாவது குழந்தை தேவையா?"
"உழைச்சு போட தெம்பில்லாதவன் தான் கணக்கு பார்த்து பெத்துக்கணும். நமக்கென்ன... கையும் காலும் நல்லா தானே இருக்கு. போக, முன்னவளுக்கு ரெண்டு குழந்தை, நமக்குன்னு ஒன்னுமில்லையேன்னு இவ வருத்தப்பட கூடாதில்ல.."
"அதுக்கில்ல ராமு, ஏற்கனவே ரெண்டு குழந்தைங்க.. அவங்களுக்கே சேர்த்து வைக்க முடியாது.. இப்போ மூனாவதா ஒன்னு வந்தா அதுக்கும் சேர்த்துல்ல சேமிச்சு வைக்கனும்... அதுக்காக சொன்னேன்."
"ஹா ஹா ஹா.. நாளைக்கு சம்பாதிக்க முடியுமோ முடியாதோன்னு நினைக்கிறவன் தான் சேர்த்து வைக்கனும். எம்புள்ளைய என்னாட்டமில்ல வள(ர்)ப்பேன். அவனே பொழைச்சிப்பான். நான் சேர்த்து வைக்க தேவையில்ல. என் வள(ர்)ப்புல எனக்கு நம்பிக்கையிருக்கு.."
சொல்லிவிட்டு போய் தன் வேலைகளை பார்த்தான். சரியாக சொல்பவர்கள் இப்படித்தான் நிற்பதில்லை. தன் உழைப்பின் மீதும், வளர்ப்பின் மீதும் அவனுக்கிருந்த அந்த நம்பிக்கை தான் அவனை இன்னமும் உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறதோ என்னமோ.
சமீபத்தில் "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தில் கதாநாயகன் இந்த வசனத்தில் ஒரு பாதியை சொல்வான்.
" சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன் தான் சேர்த்து வைப்பான்"
அன்று ராமு சொன்ன போது என் மன குளத்தில் தோன்றிய அதே அதிர்வலைகள் அப்போதும் தோன்றியது. உண்மையை சொல்பவர்கள் நம் மனதில் எப்போதும் இப்படி ஒரு அதிர்வை செய்து விட்டு தான் செல்கிறார்கள்.
உடன் வேலை பார்த்த வேலு என்ற நண்பரின் திருமணத்திற்காக சிவகாசி சென்றிருந்தோம். புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு கொண்ட நான், அவரின் திருமணத்தின் போது, எங்கள் நண்பர்களை வளைத்து வளைத்து போட்டோ பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது "கெனான்"-இன் "பாயின்ட் அண்ட் ஷூட்" காமிரா தான் வைத்திருந்தேன். என் புகைப்படங்களை பார்த்த சரவணன்...
"இன்னும் பெட்டரா எடுத்திருக்கலாம் செந்தில், உங்களுக்கு நான் சொல்லி கொடுக்கிறேன். அதன்படி எடுங்க.." என்றான்.
சரவணனுக்கு புகைப்படம் பற்றி எதுவும் தெரியாது.. சும்மா விளையாட்டுக்கு சொல்கிறான் என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனை மறுத்து
" இல்லை சரவணா, என்னிடம் நல்ல டி.எஸ்.எல் ஆர் காமிரா இல்லை.. இருந்தால் இன்னும் நன்றாக எடுப்பேன்" என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தேன்.
"அட போங்க செந்தில், ஒரு நல்ல காமிராமேன்-ன்னா... காமிராவே இல்லாமல் கூட நல்ல போட்டோ எடுக்க முடியுனும்" என்று உளர, எல்லோரும் அவனை கலாய்த்து தள்ளி விட்டோம்.
அது முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு, கே.வி. ஆனந்த், தன் "கோ" திரைப்படத்தை பற்றி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரை பேட்டி கண்டவர், கோ படத்தின் பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட இடங்கள் ரொம்ப அற்புதமாக இருந்தது, இந்த இடங்களை முன்பே திட்டமிட்டிருந்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். ஆம் என்றும், ஒரு முறை தான் அஸிஸ்டண்ட் போட்டோகிராபராக பணியாற்றிய போது அந்த அயல் நாடுகளுக்கு வந்திருந்ததாகவும், அப்போதே அந்த லொக்கேஷண்களை மனதில் குறித்துக் கொண்டதாகவும் பதிலளித்தார். மேலும் அப்போது அவரிடம் காமிரா எதுவுமில்லை எனவும், ஒரு நல்ல போட்டோகிராபருக்கு காமிராவே தேவையில்லை. தன் கண்களால் அந்த ஃபிரேம்களை மனதில் பதியவைத்து கொள்ள முடியும் என்றார். சரவணன் சொல்லியதையே அவரும் சொன்ன போது அதிரிந்து தான் போனேன் நான்.
கிராமத்தில் இருந்து சிறு நகரத்திற்கு நாங்கள் குடிப்பெயர்ந்த காலம். அப்பொது அதே தெருவில் இருந்த ஒரு வீட்டில் மாடு வளர்த்து, பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். சிறு நகரங்களில் இருக்கும் மாடுகளுக்கு நல்ல தீவணம் கிடைப்பதில்லை. மனிதர்களைப் போல் மூன்று வேலை உணவு பழக்கத்திற்கு அவைகளையும் பழக்கி வைத்திருந்தார்கள். கிராமத்தில் மாடுகளோடு பழகி வந்த அம்மாவுக்கு இதை பொறுக்க முடியவில்லை. அம்மாவின் கூற்றுபடி, மனிதர்களாகிய நாமே கூட ஆறு முதல் ஒன்பது முறை உணவு உண்ண வேண்டும். தொழில்மயமாக்கலில் (industrialization) நாம் மூன்று வேலை உணவிற்கு பழக்கப்பட்டுவிட்டோம், பாவம் அந்த மாடுகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேய்ந்தும், அசைப்போட்டும் தங்கள் பசியை தீர்த்துக் கொள்ளும். இங்கே இப்படி பட்டியில் அடைந்து கிடக்கிறது என்று அங்கலாய்ப்பார். ஏதோ தன்னால் முடிந்தது என்று வீட்டில் சமையல் கழிவுகளை 'சிங்க்-கில்' கழுவி ஊற்றி வீணடிக்காமல், அவைகளுக்கென்று ஒரு குடம் வாங்கி வந்து, அதில் ஊற்றி, ஒரு நாளுக்கு இரண்டு முறை அந்த மாடுகளுக்கு தண்ணி வைத்துவிட்டு, கழநி தண்ணீரும் வைத்து வருவார்.
கழநி குடம் கொஞ்சம் நாற்றமடிக்கும். மேலும் அம்மா அதை சுமந்து சென்று ஊற்றி வருவது வேண்டாத வேலை என்று வீட்டில் நாங்கள் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் (சமயத்தில் எங்களை போய் ஊத்திவிட்டு வர சொல்லுவதால்). அம்மாவோ கேட்காமல் இந்த வேலைகளை தினமும் செய்து வந்தார். ஒரு ஆறு மாதங்களுக்கு பின் ஒரு நாள், பால் வியாபாரம் பண்ணும் அந்த பெண், தன் கணவர் மற்றும் போலீஸ் இருவருடன் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவை கைது செய்யுமாறு கூச்சலிட்டார்கள். ஏன் என விசாரித்தால், கழநி தண்ணீரில் அம்மா விஷம் வைத்து அவர்கள் வீட்டு கன்று குட்டியை கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்கள் (அடபாவிகளா!!!). வாயில்லா ஜீவன்களுக்கு நல்லது செய்ய போய், இப்படி ஒரு பழி சொல். அம்மாவை விட
"இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா" என நான் அதிர்ந்து போனேன்.
பின் இறந்த அந்த கன்று குட்டியை சோதனை செய்து, விஷத்தால் சாகவில்லை என தெரிந்த பின் தான் அம்மாவுக்கு அந்த கேசிலிருந்து விடுதலை வந்தது. அந்த ரிஸல்ட் வரும் வரை இருந்த இடைவெளியில், அந்த ஒரு வார காலமும், அம்மா காலை, மாலை என இரண்டு வேலைகளும் போலீஸ் ஸ்டேஷன் சென்று கையெழுத்திட்டு வந்தார்கள். காமடி என்னவென்றால், விஷத்தால் இல்லை என்று தெரிந்த பின் அந்த பெண் அம்மாவிடம் மண்ணிப்பு கேட்டதோடு இல்லாமல், மீண்டும் கழநி தண்ணீரை
ஊற்றுமாரு விண்ணப்பித்தது தான். அதை விட அதற்கு அமோதித்து அம்மா மீண்டும் கழிநி தண்ணீரை நாள் தவறாமல் அந்த மாடுகளுக்கு ஊற்றியது அதை விட பெரிய அதிர்ச்சி.
சி.என்.என். தொலைக்காட்சியில் அமேரிக்கா வில் நடக்கும் "ப்ரெசிடென்டியல் டிபேட்" Presidential Debate ஒளிப்பரப்புவார்கள். இந்திய அரசியலை பார்த்து வளர்ந்த ஒவ்வொரு சாமான்யனுக்கும் அந்த நிகழ்ச்சியே பெரும் அதிர்ச்சி தான். ஒரே மேடையில், ஜனாதிபதி பதவிக்கு போட்டி போடும் இரண்டு தலைவர்கள் (இருவர் மட்டும்), தாங்கள் பதவிக்கு வந்தால் என்னென்ன செய்ய போகிறோம், அதை செய்து முடிக்க அவர்கள் வைத்துள்ள திட்டம் என்ன என்றும், அடுத்தவரும் அதே திட்டம் வைத்திருந்தால், அவரை விட தான் சிறப்பாக செய்ய என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற உள்ளார் என்றும் இரு கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து கேட்கும் ஒரு பொது கூட்டத்தில் பேசுவார்கள். அந்த அரசியல் நாகரீகத்தை பார்த்த முதல் நாள் என்னால் அந்த அதிர்வில் இருந்து மீளவே முடியவில்லை. இந்த தன்மை நம் மக்களிடையே, நம் அரசியல்வாதிகளிடையே வர, இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ என்று வியப்பாக இருந்தது.
ஒரு முதல்வரின் (எம்.ஜி.ஆர்) இறுதி ஊர்வலத்தில், அதில் உள்ள ஒரு பெண் தலைவியை (ஜெயலலிதா), அந்த தலைவரின் உடலை கொண்டு சென்ற வண்டியில் ஏற முற்படும் போது, உட்கட்சி பூசலால், ஒரு மூத்த அரசியல் தலைவர் பெண் என்றும் பாராமல் எட்டி உதைத்ததும், அதே அரசியல்வாதி அம்மா என்று சொல்லி அவரின் காலில் விழுவதும் என, தமிழ் நாடு அரசியலே பெரும் அதிர்ச்சிகளின் உறைவிடம் தான்.
அடுத்த இரண்டு தினங்கள் நீதித்துரை விடுமுறை என கணக்கு செய்து, இரவோடு இரவாக சென்று மூத்த அரசியல் தலைவரை (கருணாநிதி) குண்டுகட்டாக தூக்கி, அள்ளி உள்ளே போடுவதும், அடுத்த இரண்டு நாட்களிலேயெ அவர் வெளியே வருவதும் என தமிழ் நாட்டு அரசியலை பின் தொடரும் ஒவ்வொரு சாமான்யனுக்கு தான் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள்.
கர்நாடகா தண்ணீர் தரவில்லை, கேரளம் தண்ணீர் தரவில்லை. ஒரே நாட்டில் இருந்து கொண்டு என்ன இதெல்லாம் என்று நானும் கூட உணர்ச்சிவசப் பட்டிருக்கிறேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்த பின், நமக்கு அந்த அருகதையே இல்லை என தெரிந்ததும் பேரதிர்ச்சி. அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்டு, படித்து நல்ல சூழலில் உள்ள நாமே இப்படி கொந்தளிப்போமேயானால், படிக்காதவர்களின் நிலை என்ன என நினைத்து அதிர்ந்து தான் போனேன். இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு தானே இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
றெக்கையின்றி பறந்த கல்லூரி காலம். அதுவும் அதுவரை விடுதிக்குள்ளேயே அடைப்பட்டு, அயல் உலகமே தெரியாமல் வளர்ந்த என் போன்றோருக்கும், பள்ளி இறுதி வரை பக்கத்திலேயே இருக்கும் பள்ளிக்கு சென்றுவிட்டு, கல்லூரிக்காக முதன்முதலாக, தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியே சென்று படிப்பவர்களுக்கும் சரி, கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒருவித அதிர்ச்சி தான்.
கல்லூரியிலும் விடுதியில் தங்கி தான் படித்தேன் என்றாலும், இது தனி வாழ்க்கை. கேட்பாரற்று, உங்கள் கட்டுபாடிற்கு மட்டுமே நீங்கள் கட்டுக்கடங்கும் வாழ்க்கை. விடுதியில் சேர்ந்த இரண்டாவது நாளே என் சட்டையை இன்னொரு நண்பன் போட்டுக்கொண்டான். விடுதி வாழ்க்கையில் இது பழகியது என்றாலும்.. "மச்சான் இன்னைக்கு எல்லாமே உன்னுடையது தான்" என்று சொல்லி, கால்சட்டையை நீக்கி உள்ளாடை காமிப்பான் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. பின் ரொம்ப கெஞ்சிக்கேட்டதற்கு பிறகு என் உள்ளாடைகளை மட்டும் யாரும் தொடுவதில்லை என்று முடிவுக்கு வந்திருந்தார்கள்.
என்னோடு தங்கியிருந்த இன்னொரு கிராமத்து நண்பனுக்கு இது துளியும் பழக்கமில்லை. அவன் இதற்கெல்லாம் டென்ஷன் ஆகுவது, மற்ற நண்பர்களுக்கு விளையாட்டாகி போனது. வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றுவதற்காகவே, அவன் பொருட்களை எடுப்பார்கள்.
"மச்சான்... உன் டூத் ப்ரஷ் சாஃப்ட்-டாவே இல்லடா... வேற மாத்து ப்ளீஸ்"
என்று தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி சொல்லிவிட்டு போவார்கள். பெட்டிக்கு பூட்டு போட்டால், பூட்டை உடைத்து விடுவார்கள். அவனுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அதிர்ச்சி தான்.
இமான் அண்ணாச்சி நிறத்தில் அவரை விட அளவில் பெரியதாய் இருக்கும் ஜே.பி என்ற சீனியர், அவனின் துண்டு கட்டிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தார்.
"சீனியர் அது என் துண்டு... ப்ளீஸ் குடுங்க" என்றது தான் தாமதம்...
குளித்துக்கொண்டிருந்தவர், பிறந்தமேனியாகி துண்டை கழட்டி கொடுக்க... இவன் அதிர்ச்சி தாங்காமல் திரும்பி பார்க்காமல் ஓடி வந்தான். அந்த துண்டு அதற்கு பிறகு அவன் தொடவே இல்லை.
கலைக்கல்லூரியில் எலக்ஷன் வைப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் செலவுகள், அதற்கான பணத்தை ஏற்பாடு செய்யும் விதம், அரசியல் கட்சிகளின் ஆதரவு, அறுபதடி கட்-அவுட், ஆள் சேர்க்க, ஓட்டு கேட்க போகும் தோரணை என எல்லாமே அதிர்ச்சி தான். தியேட்டர்களில் ஒரு நாள் ஷோ முழுவதையும் முன் பதிவு செய்து, ஒவ்வொரு மாணவனுக்கும் டிக்கெட் கொடுப்பது, உள்ளே தியேட்டரில், படத்திற்கு நடுவே "பிட்" படம் ஓட்டுவது, அந்த சாலையில் உள்ள அனைத்து தேநீர் கடைகளிலும், அடையாள அட்டை காட்டினால் இலவசமாக பஜ்ஜி, போண்டா, தேநீர் தருவது, எந்த ஓட்டலிலும் மதிய உணவு இலவசமாக தருவது என எல்லாமே அந்த ஒரு மாதங்களுக்கு இலவசம் தான்.
கல்லூரியின் பின்புறம், பெரிய கொப்பரையில் அனைத்து வித மதுவையும்
ஊற்றி, போவோர் வருவோரெல்லாம், முகம் கழுவ பயன்படுத்தும் ஜக்-கை கொண்டு இஷ்டத்திற்கு குடிப்பது, கோஷ்டி தகறாறில் சினிமாவில் ரௌடிகள் பயன்படுத்தும் சைக்கில் சைன், நீளமான கத்தி, வீச்சருவாள் வைத்திருந்தது எல்லாம் மிரள வைத்த அதிர்ச்சிகள்.
அதிக செலவு செய்து தோற்றுப்போன "கிச்சா" போவோர், வருவோரை எல்லாம் பைத்தியம் பிடித்து போல் அடித்ததும், அவன் செல்லும் வரை வேதியல் லபாரெட்டரிக்குள் கதவு, ஜன்னல்களை சாத்திக்கொண்டு எங்களோடு ஆசிரியர்களும், HODயும் ஒளிந்து இருந்ததும் இன்னமும் பயமாக தான் இருக்கிறது.
முன்னூற்று அறுபத்தைந்து நாள் வருடத்தில், நாற்பத்தி இரண்டு நாள் மட்டுமே கல்லூரி நடந்ததும், அந்த நாட்களில் கூட, மதியத்திற்கு மேல் யாரும் வகுப்பறைக்கு செல்லாததும், அப்படிப்பட்ட கல்லூரியில் படித்து, அதிலும் மூன்று பேர் கரண்ட் இயரில் அரியர்ஸ் இல்லாமல் டிஸ்டிங்க்ஷனில் பாஸ் செய்ததும் (கண்டிப்பாக நானில்லை) அதிர்ச்சியோ அதிர்ச்சி.
கணினி படிப்புக்காக சென்னையில் ஒரு மேன்ஷனில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்களில் ஓரிருவரை தவிற யாரும் தொடர்பில் இல்லை. சென்னையின் இரண்டு ஆண்டுகள், எந்திர வாழ்வை என்னுள் விதைத்துவிட்டிருந்தது. ஒரு நாள் மேன்ஷன் மேனஜர் எனக்கு போன் வந்திருப்பதாகவும், யாரோ பெண் பேசுவதாகவும் அவர் இருந்த தரை தளத்தில் இருந்து மூன்றாவது மாடியில் என் அறைக்கு கேட்பது போல் கத்தினார். அந்த நம்பரை வீட்டில் உள்ளவர்களுக்கு தவிர வேறு யாருக்கும் கொடுக்காததால், ஒரு வித பயத்தோடு தான் போன் பேச போனேன். போனில்..
" தம்பி.. செந்தில்.. நான் கார்த்தியோட அக்கா பேசுறேன். உங்க வீட்டுக்கு கேட்டு, இந்த நம்பர் வாங்கினேன், அர்ஜென்ட்-டா ஒரு ஹெல்ப்புப்பா... தயவுசெஞ்சி இங்க குமரமங்களம் வரமுடியுமா..இங்க கார்த்தி உடம்பு
முடியாம இருக்கான். அம்மா மூனு மாசம் முன்னால தவறிட்டாங்க. இவன் அப்பயிலிருந்து சித்த பிரம்ம புடிச்சவனாட்டம் அப்படியே இருக்கான். சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல.. அம்மா அம்மான்னு அனத்திக்கிட்டே இருக்கான். கொஞ்சம் வந்து, அவன வெளிய கூட்டிட்டு வாப்பா..டாக்டரும் அது தான் சொல்றாரு" என்றார். அவர் அப்படி அழுது கொண்டே சொன்னதும், உடனே போக வேண்டும் போலிருந்தாலும், வார இறுதிக்கு வருவதாகவும், பயப்பட வேண்டாமென்றும் சொல்லி வைத்தேன். போகலாமா வேணாமா என்று இருமனசு.
கார்த்திக் கல்லூரி காலங்களில் நெருங்கிய நண்பன். எங்கே ஊர் சுற்றினாலும் ஒன்றாக சுற்றுவோம். கல்லூரிக்கு அவன் மூத்த அக்கா வீட்டிலிருந்து வந்து போய் கொண்டிருந்தான். தேர்வு காலங்களில் இரவு படிக்க எங்களோடு விடுதியில் தங்கி விடுவான். வேதியல் பயின்ற இருநூற்று ஐம்பது மாணவர்களில், கரண்ட் இயரில் பாஸ் பண்ண மூவரில் ஒருவன். அதற்கு பிறகு கோயம்புத்தூரில் பட்டமேற்படிப்புக்காக சேர்ந்திருந்தான். இப்போது இப்படி தகவல் வந்து அவனை போய் பார்க்கும் போது, வீட்டின் ஒரு ஓரத்தில் உள்ள கட்டிலில் படுத்திருந்தான். என்னை பார்த்ததும்
"அம்மா தவறிட்டாங்க செந்தில்.. உனக்கு கூட சொல்லி அனுப்ப முடியல.."
என்று அழ ஆரம்பித்தான். நான் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி, வேறு தலைப்புகளுக்கு என் பேச்சை கூட்டி சென்றாலும், அதில் ஒரு நூலை பிடித்து, மீண்டும் அம்மாவுக்கே வந்து நின்றான். இடையில் தற்கொலை முயற்சி, இரவில் அணத்துவது, நாக்கை கடித்துக் கொள்வது, தன்னையே வறுத்திக்கொள்வதென அந்த மூன்று மாத காலத்தில் பல இன்னல்கள் கொடுத்திருக்கிறான். சைக்கியாட்ரிஸ்ட்-டிடமும் கூட்டி சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு வந்து, வேறு நல்ல சூழலுக்கு மாறினால் தான் சரியாகும் என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர். அவன் அக்கா, மாமா, சித்தப்பா, உள்ளூர் நண்பர்கள் யார்யாரோ கூப்பிட்டும் அந்த இடத்தை விட்டு நகராதவன், என் சொல்லுக்கு இனங்கி, என்னோடு சென்னை வர சம்மதித்தான்.
இரண்டு வாரங்கள் என்னோடு சென்னையில் தங்கியிருந்தான். கொஞ்சம் தெளிவாகிவிட்டோம் என அவனாக தெரிந்து கொண்டு, மீண்டும் ஊருக்கு செல்கிறேன் என்றான். அவனை பஸ் ஏத்தி விடும்போது தான் கேட்டேன்...
"ஏன்டா யார் கூப்பிட்டும் எங்கேயும் போகதவன், எப்படி டா நான் கூப்பிட்ட உடனே வந்த? சென்னையை பார்க்கனும்னு தானே"
என்று விளையாட்டாக கேட்டேன்.
"இல்லடா நீ வந்து கூப்பிட்ட போது, அம்மாவே உன்னை அனுப்பி வச்சதா தோனிச்சு... அதான் வந்தேன்..." என்றான்.
ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன் நான். அன்று அக்கா எனக்கு தொலைபேசியில் பேசிய பிறகு போகலாமா வேண்டாமா, இரண்டு வருடம் டச்-சே இல்லை, இப்போது நாம் போய் பார்த்து என்ன ஆகப் போகிறது என்று தான் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு பிறகு என் கனவில் அவன் அம்மா வந்து, அவனை பார்த்து விட்டு வரும்படியும், நான் சொன்னால் கேட்ப்பான் என்றும் கனவில் சொன்னதால் தான், நானும், சரி போய் தான் பார்ப்போமே என்று அவனை பார்க்க சென்றேன். அவனும் அதையே சொல்ல... கொஞ்சம் அதிர்ச்சியாகவும், பயமாகவும் கூட இருந்தது. அக்காவின் அந்த தொலைபேசி உரையாடலையோ, அல்ல அந்த கனவையோ நான் அலட்சியம் செய்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பார்க்க கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.
NIIT-யில் கணினி படித்துக்கொண்டிருக்கும் போது முதல் மூன்று இடங்களுக்கு, நான், சோமேஷ், விமல் மூன்று பேரும் மாறி மாறி வருவது வழக்கம். இரவு ஏழிலிருந்து ஒன்பது வரை வகுப்பு. அது முடிந்ததும், சில நாட்கள் தேநீர் குடிக்க கூட்டமாக போவோம், சில நாட்கள், சில்லி சிக்கன், நண்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தார் போல் போவோம். அப்படி போகும்போது ஆங்கிலத்தில் பின்னி பெடலெடுக்கும் சோமேஷின் தாய் மொழி என்ன என்று கேட்டபோது, "டாமில்" என்றான். கொஞ்சம் கூட அதற்கான அறிகுறியே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவனோடு பழகியிருந்தும் ஒரு வார்த்தை கூட அவன் தமிழில் பேசியதில்லை. படிக்கும் காலத்திலேயே இது போல் பல கொள்கைகள் பின்பற்றினான். கணினி படிக்கும் நண்பர்களோடு ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுவதென்று முடிவெடுத்திருந்தான். இனிப்புகளை பிரியமாக சாப்பிடும் அவன் தங்கையின் இறப்புக்கு பின், தேநீரில் கூட சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை. அவன் நாவில் இனிப்பு என்ற சுவையை அவன் தங்கையின் மரண அதிர்ச்சி அழித்துவிட்டிருந்தது.
விமலின் பெற்றோர் இருவரும் ஒரே கார் விபத்தில் இறந்து விட, அவனும் அவன் தங்கையும் தனித்துவிடப்பட்டார்கள். தன்னை அனாதையாக்கிய இந்த அதிர்ச்சிக்கு பின் இறைவனை வணங்குவதேயில்லை என்றிருந்த அவனிடம், அதே காரில் பயணம் செய்த அவன் தங்கை இறக்காததை சொல்லி, அவளும் இறந்திருந்தால் தான் அவன் அனாதை என்றும், கடவுள் உன்னை அனாதையாக்காததற்கு அவருக்கு அவன் நன்றி சொல்லவேண்டும் என்று புத்தி சொல்லியிருக்கிறார் அவர் மாமா. நடுத்தெருவில் நண்டு சாப்பிடும் முன்னும் கூட, பத்து வினாடிகள், கண்கள் மூடி இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு தான் சாப்பிட்டான் விமல்.
தன் அம்மாவின் மறைவுக்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து, அவருக்கு கொள்ளி வைக்கும் உரிமை தனக்கு இல்லை என்றும், அவரின் இறுதி வரை பார்த்துக்கொண்ட அவரின் தம்பி தான் அம்மாவுக்கு கொள்ளி போட வேண்டும் என்று சொல்லிய ரகு மாமா, அன்று முழுதும் அழவேயில்லை. சொல்லப்போனால், மூச்சுமுட்ட குடித்துவிட்டு, அனைவரிடம் ஏதேதோ உளரி, அனைவரிடமும் அப்போதே திட்டு வாங்கி கட்டிக்கொண்டார். எல்லாம் முடிந்து ஒரு ஆறேழு தினங்களுக்கு பின், எங்கள் வீட்டில் நாங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க.. அரண்மனைக்கிளி படத்தில் ராஜ்கிரனின் அம்மா மறைவிற்கு இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.
"புத்திமதி சொல்லையிலே தட்டிச்சென்ற பாவியடி..
விட்டுவிட்டு போன பின்னே வேகுது என் ஆவியடி..
ஓடோடி பாடுபட்டேன் நாளெல்லாம் யார்யார்க்கோ...
சேராமல் போனதடி சேர்த்தது தாயார்க்கோ...
பெத்தமனம் என்னவென்று தோனலையே....
பக்கம்வந்து கொள்ளி வைக்க கூடலையே..."
இந்த வரிக்கு பின்... "அம்மா... " என்று ஒரு பெரிய அலறல்.
ரகு மாமா... மனசு வெடித்து, சத்தம் போட்டு அழுகிறார். எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவரை நிதானத்திற்கு கொண்டு வர வெகு நேரமானது. அதிர்ச்சிகளை தாங்கிக் கொண்டு, எவ்வளவு தான் வலிக்காதது போல் நாம் காட்டிக்கொண்டாலும், ஏதோ ஒரு நேரத்தில் அது வெளிப்பட்டு, முட்டி மோதி, அதன் அதிர்வுகளை கண்ணீராய் வெளிக்காட்டிவிடுகிறது.
எல்லா இறப்புமே அதிர்ச்சியாக இருப்பதில்லை. அன்பானவர்களாயினும், உடல் நிலை சரியில்லாமல் இருந்து இறந்து போகும் போதும் அந்த இடைப்பட்ட காலத்தில் நம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த செய்தியை உள்வாங்கிக்கொள்ள பக்குவப்பட்டு விடுகிறது. ஆனால் பெரும்பாலும் துர்மரணங்கள், தற்கொலைகள் போன்றவை சம்மந்தப்பட்டவர்கள் அல்லாது மற்றவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுகிறது.
சினிமா பாடல்களை சிலாகித்து சொல்லும் போது..."ச்ச... அனுபவிச்சு சொல்லியிருக்கான்யா" என்று கதையின், கதாப்பாத்திரத்தின் மன நிலையில் இருந்து கவிஞர் எழுதிய பாடல்களை சொல்லுவது வழக்கம். முதல்வன் திரைப்படத்தில், "கனுக்கால் கூட கறுப்பு இல்ல" என்ற வரி பாடும் போது, வைரமுத்து அனுபவிச்சு எழுதியிருக்கார் என்று சொன்னேன். அதை இரட்டை அர்த்தம் பண்ணிக்கொண்டு..."இருக்கலாம்.. மணீஷா கொய்ராலா தான் உண்மை என்னன்னு சொல்லனும்" என்று ஒரு நண்பர் கமென்ட் அடித்தார். அப்படி இன்னொரு பெண்ணுக்கு பொறுத்தமான பாடல் என்றால் அது வில்லாதி வில்லன் படத்தில் சிலுக்கு சுமிதாவிற்கு எழுதிய "ஃபேமிலி" பாட்டு தான்.
"தங்கம் உடம்பில் தழும்பே இல்ல...
தடவி பாரு எலும்பே இல்ல.."
என்று எழுதியிருப்பார் கவிஞர். அப்படி ஒரு அழகான, வாளிப்பான உடலமைப்பு. பல நாட்கள் என் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என் கனவுகன்னி சிலுக்கு சுமிதா தான். அவர் இறந்து போன செய்தியை காட்டிலும், தன்னை புரிந்துகொள்ள யாருமில்லை என எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டது தான் பேரதிர்ச்சியாக இருந்தது.
திருவண்ணாமலையில் ஒரு முறை ஷூட்டிங் நடந்த போது, அவர் கடித்து வைத்துவிட்டு போன மாங்காயை ஒன்னறை லட்சத்திற்கு அன்றைக்கே ஏலம் விட்டு பணமாக்கினார்கள். அவ்வளவு பணம், புகழ் எல்லாம் இருந்தும் அவரை தற்கொலைக்கு தூண்டியது எது? அந்த நிகழ்வு வரை..வாழ்க்கையில் செட்டில் ஆவது, பணம் சம்பாதிப்பது, புகழ் அடைவது இது தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். இது எல்லாமிருந்தும், அவர் தற்கொலை செய்து கொண்டது, வாழ்வின் மீது எனக்கிருந்த புரிதலை மாற்றியமைத்தது.
"அடி வயிறு எரிகிற மாதிரி இருக்கு" என்று மூன்று நாட்களாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அப்பாவை, டையாலிஸிஸ் செய்து விட்டு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, சிறுநீரக குழாய் விரிவடையும் என்றும், அதனால் எரிச்சல் இருக்குமென்றும் சொல்லி ஒரு மருத்துவர் திருப்பி அனுப்பி விட்டார். மறுயோசனை நல்லதென, இன்னொரு மருத்துவமணையில் சோதிக்க, அவர்கள் மூன்று நாட்கள் அங்கேயே இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள சொன்னார்கள். அதன்படி மூன்றூ நாட்கள் தங்கி, எல்லாம் சரியாகி விட்டதென அவர்களும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
மருத்துவமணையில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்கு பிறகு அப்பா என்னிடம்...
"இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லப்பா... எல்லாம் சரியாயிட்ட மாதிரி இருக்கு...ம்ம்...அதிகம் செலவு ஆகிவிட்டதா" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, இன்ஸுரன்ஸ்ல எல்லாம் கவர் ஆயிட்டது. ஒரு ஐயாயிரம் தான் நம்ம கை செலவு, அவ்வளவு தான்" என்றேன்.
"அப்பாடா... ரொம்ப செலவோன்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன்ப்பா.. இப்போ தான் திருப்தி" என்றார்.
அன்று இணையத்தில் ப்ளாக் (blog) ஒன்று ஆரம்பித்து "லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல்" (Life is Beautiful) என்று தலைப்பு வைத்து, ஒரு பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழைப்பு வந்து, நூத்தியெட்டு ஆம்புலன்சுக்கு சொல்லி,அதை அழைத்து கொண்டே வீட்டிற்கு செல்கிறேன்.
அப்பாவை ஹாலில் கிடத்தி வைத்திருந்தார்கள். இப்போ தான் திருப்தி என்றவர் இறந்து போயிருந்தார். அதிர்ச்சியாக இருந்தாலும், இறந்த அவரின் பிரிவுக்கு சொட்டு கண்ணீர் விடாமல், அவரின் நல்ல நினைவுகளை தான் அந்த அதிர்வலைகளால் உருவாக்க முடிந்தது.
அன்பானவர்களின் புரிதலை தாண்டிய வாழ்வு ஏது? புரிந்து கொண்டவர்களை அதிர்ச்சிகள் என்ன செய்யமுடியும்.