Sunday, January 10, 2016

விரும்பி கேட்டவை

ஒரு பாடலை கேட்ப்பதற்கும், ஒரு பாடலை ரசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பல பாடல்களை கேட்கிறோம். சில பாடல்களை மட்டுமே ரசிக்கிறோம். ரசிக்கப்பட்ட பாடல் நம்மை கடத்துகிறது. நேரம், இடம், சூழல், கூட இருப்பவர்கள் அனைத்தையும் கடத்தி, அந்த பாடலுக்கென்று நாம் படைத்துக் கொண்ட ஒரு தனி உலகத்திற்கு இட்டு செல்லும் ஊர்தியாக, நாம் ரசிக்கும் பாடல்கள் விளங்குகின்றன. சமீபத்தில் எஸ்.ரா வின் விரும்பிக் கேட்டவள் சிறுகதை படித்தேன். பாடல்கள் எவ்வளவு உன்னதமான துனை என்பதை படித்ததிலிருந்து, எனக்கு பிடித்த, நான் ரசித்த பாடல்களை பட்டியலிட தொடங்கி விட்டது மனசு. ஒவ்வொரு பாடல்களும் அவற்றை நினைத்த மாத்திரத்திலேயே, அவற்றின் உலகிற்கு என்னை கொண்டு சென்று விடுகின்றன. இயற்பியலில் Parllel world என்ற ஒரு concept உண்டு. உதாரணமாக, ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் சொல்லலாம். புறஉலகில் இருக்கும் ஒருவர், கனவுலகில் வேரொருவராக வாழ்வார். இரண்டும் ஒருவரே.. ஆனால் வெவ்வேறு வாழ்க்கை. பாடல்களை ரசிக்கும் போது நாமும் நம்முடைய அந்த parllel world க்கு சென்று திரும்பி விடுகிறோம். அங்கே நுழைவாயிலிலேயே அந்த உண்ர்வுடனே நம்மை அழைத்து செல்கிறது பாடல்.

இரவில் ஜெயா மேக்ஸ்-சில் பழைய பாடல்களை கேட்டபடியே அம்மா தூங்குவார்கள். "அம்மா.. அம்மா.." என்று ஓரிரு முறை கூப்பிட்டும் அவர்களிடம் பதில் வராமல், தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட பின், தொலைக்காட்சி பெட்டியை நிறுத்தினால், டக்கென விழித்து "ஏன் கண்ணு நிறுத்தின"ன்னு கேட்ப்பார்கள். காதுகள் கேட்க்காமல், உடல் உறங்கும் வேளைகளிலும், மனசு பாட்டை ரசித்துக் கொண்டிருப்பதையும், அந்த பாடலின் உலகிற்கு, நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த பாடல் தான் உயிர் நாடி என்பதையும் அப்படி தான் நான் கண்டு கொண்டேன். சில வேளைகளில், குறிப்பாக சிவாஜி கனேசனின் கருப்பு வெள்ளை பட பாடல்களில், அம்மா ரசித்துக் கொண்டே உறங்கும் போது மூடிய இமை வழியே கண்ணீர் கசிவதும் உண்டு.  அந்த உலகத்தில் இருக்கும் அவரை தொந்தரவு தராமல் அப்படியே விட்டுவிடுவது தான் அவரின் உணர்வுக்கும், ரசனைக்கும் நான் தரும் மரியாதை. சில நேரங்களில், மனசுக்குள் கூடவே பாடும் போது, உதடுகள் மெல்ல அசைவதும் உண்டு.

"கண்ணின் மணி போல
மணியின் ஒளி போல
கலந்து பிற்ந்தோமடா...

இந்த மண்ணும் கடல் வானும்,
மறைந்து முடிந்தாலும்...
மறக்க முடியாதடா... உறவை
பிரிக்க முடியாதடா..."

பாசமலரின் இந்த பாடலுக்கு மட்டும் அம்மா அழுததை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். நெஞ்சு கணத்து, தொண்டை அடைத்து, அம்மா கண்ணில் நீர் வரும். அம்மாவின் முகத்தை அப்போது பார்க்க நேரிட்டால், தலையை குனிந்தோ, வேறு பக்கம் திரும்பியோ சற்று மனம் தளர்த்திக் கொண்டு, அந்த உணர்வில் இருந்து மீண்டு வருவார். அந்த தருணங்களில் அவரை பார்க்காமல், அவரை அதே உணர்வில் விட்டு விடுவது தான் நல்லதென தோன்றும். தன் உடன்பிறந்தவர்களை, குறிப்பாக அண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற இருபாலார் உடன்பிறப்புகள் உள்ள யாருக்கும் இந்த பாடல் கண்ணீரை வரவழைத்து தான் மன பாரத்தை குறைக்கிறது.


இருப்பதைந்து ஆண்டுகளாக பிரிந்து இருந்த பள்ளி நண்பர்கள் ஒன்றாகி, வாட்ஸாப்-பில் குழு ஒன்று தொடங்கி அனைவரும் ஒரு வருடமாக இனைந்து இருக்கின்ற கால கட்டம்.  அதிகாலையில் காலை வணக்கத்தில் ஆரம்பித்து, இரவு வணக்கம் வரை அனைவரும், அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிற உண்ணத நண்பர்களால் ஆன குழு. டிசெம்பர் பதினொன்று அன்று வாட்ஸாப்பின் குழுவிற்கான புகைப்படத்தை பாரதியின் வரைப்படம் கொண்டு பதிவிட்டிருந்தாள் ஒரு தோழி. மேலும், ஒரு மகா கவியியின் பிறந்த நாள். பாரதி பாட்டு என்ற உடனே எங்களுக்கெல்லாம் ஞாபகம் வரும் மருதவாணியை பாட சொல்லியும் விண்ணப்பம் வைத்திருந்தாள். மருதவாணிக்கு பள்ளி காலத்தில் நல்ல குரல் வளம். எல்லா விசேஷ தினங்களிலும், பள்ளி ப்ரேயரிலும் பெரும்பாலும் வாணியின் குரலேயே தான் ஒலிக்கும்.

"யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்... தீது நன்மையெல்லாம் காளி தெய்வலீலையன்றோ..."

பதின்வயதில், அவள் பாடிய அந்த குரல், அதில் இருந்த குழைவு எல்லாவற்றையும், நினைக்கும் போதே, அந்த பாடல் இன்னமும் அப்படியே கேட்கிறது. அப்போது என்ன மனநிலை இருந்தது என்று தெரியவில்லை. இப்போதும் அந்த பாடலை நினைக்கும் போது, கேட்க்கும் போதும்...மனசு கனக்கிறது... காரணம் இல்லாமல், சொல்ல முடியாத ஒரு உணர்வு அழுகையை உண்டு பண்ணுகிறது. வாணி ஏனோ அந்த நாள் முழுதும் வாட்ஸாப் குழுவிற்குள் தலை காட்டவே இல்லை. இந்த நிகழ்வு முடிந்த ஆறேழு நாட்க்களுக்கு பின் குழுவில் கலந்து கொண்ட வாணியிடம் ரொம்ப நாள் காணவில்லையே என்று விசாரித்த போது, வீட்டில் உள்ள பணிகளில் இருந்ததாகவும், தன் மாமனாருக்கு உடல் நலம் சரியில்லாததால், அதிக வேலைகளில் இருந்ததாகவும், கொஞ்ச நாட்களுக்கு தன்னால் சரிவர பதிவுகள் பகிரமுடியாதென்றும் கூறிச் சென்றாள். தான் பாடும் மன நிலையில் இல்லையென்றும், தன்னை வற்புறுத்த வேண்டாமென்றும் தாழ்மையோடு கேட்டுக்கொண்டாள். இந்நிலையிலோ, அல்ல இந்த வயதிற்கான குரலிலோ அவள் மீண்டும் பாடி அனுப்பாதது கூட ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. அது பழைய வாணியின் குரலில் இருந்த அந்த உலகை சிதைத்து விட்டிருக்கக் கூடும். ஆனால், அந்த பதின்ம வயது வானியின் குரலில் கேட்ட அந்த பாடல் உருவாக்கிய அந்த தனி உலகம் இன்னமும் அப்படியே இருக்கிறது.


பாரதியை நினைக்கும் போதெல்லாம், அந்த உலகத்தில் எட்டிப் பார்த்து, அதே குரலை, அதே உணர்வை எப்போது வேண்டுமானாலும் அடைந்து விட்டு வர முடிகிறது. பாரதியின் பாடல்கள் மேல் தனி மோகம் கொள்வதற்கு சினிமாக்களும் ஒரு காரணம். மறைந்த வேறு எந்த கவிஞரின் பாடலையும் இவ்வளவு சிலாகித்து சினிமா கொண்டாடியதில்லை. முகநூலில், இளையராஜா ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். ராஜாவின் இசையில் தன் பாடலை கேட்க, பாரதிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று. எத்தனையோ இசையமைப்பாளர்கள் பாரதியின் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். பாரதியும் கூட சங்கீதம் தெரிந்தவர் என்பதால், எந்த பாடலை எந்த ராகத்தில், எந்த தாளத்தில் பாட வேண்டும் என்றும் கூட குறிப்பு எழுதி வைத்திருந்தார். ஆனால், அந்த வரைமுறைகளை தாண்டி உங்களுக்குள் உணர்வை பீச்சியடிக்க ஒரு இளையராஜா தேவைப்படுகிறது. பாரதியை பற்றி கொஞ்சம் மட்டுமே தெரிந்த என்னை போன்ற பலரையும் அவர் பாடலை கேட்டு கிரங்க வைத்த பெருமை இளையராஜாவுக்கு சேரும். இயக்குனர் ஞானசேகரின் அபரிதமான முயற்சியில், முப்பதெட்டு வருட பாரதியின் வாழ்க்கையை, இரண்டரை மணிக்குள் சுருக்கி, அவரின் வாழ்வை அழகாக "பாரதி" என்ற திரைப்படத்தில் பதிந்திருந்தார். பாரதியின் இறப்பு. எண்ணி பதிமூன்று பேர் மட்டும் கலந்து கொண்ட ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலம். பின்னனியில் அவன் எழுதிய பாடல்... "நல்லதோர் வீணை செய்தே..." வெவ்வேறு ஸ்ருதியில், வாய்ஸ் ஹார்மனி-யில், கோரஸாக பாடல் ஆரம்பிக்கிறது...ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு குரலாக, ஒவ்வொரு இசை கருவியின் இசை இன்டர்லூடாக...பாடல் விரிகிறது. மூச்சு முட்ட நெஞ்சம் விம்முகிறது.... "வல்லமை தாராயோ... இந்த மாநிலம் பயனுர வாழ்வதற்கே..." என்று தன் தனிகுரலில் ராஜா கரையும் போது அடக்கி வைத்த சோகத்தால் நெஞ்சம் வெடித்து விடுவது போல இருக்கிறது...." சொல்லடி சிவசக்தி, நில சுமையென வாழ்ந்திட புரிகுவையோ."... இந்த இடத்தில் அடைத்து வைத்த சோகமெல்லாம் கட்டுக்கடங்காமல் கண்களில் நீரை வரவழைத்து விடுகின்றன... அதற்கு பின் தொடரும் சரணம், அந்த நாளையே சோகமாக்கி விடுகிறது....மனதோடு இழைந்து, இழைந்து, செய்த பாவமெல்லாம் கொண்டு சென்று, கடவுளின் சந்நிதியில் கொட்டிவிட்டு எல்லாத்தையும் உன்னிடம் சொல்லிவிட்டேன்... உன்னை அன்றி வேறு கதியில்லை... நீயே பார்த்துக்கொள் கடவுளே என்று சொல்லும் போது ஒரு உணர்வு வருமே...அந்த உணர்வுக்கு  இட்டு போகும் அடுத்த வரிகள்....

தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடு நல் அகங்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன்...
இவை ஆருள்வதில் உனக்கெதும் தடையுளதோ.....

பாரதியை, நல்லதோர் வீணையை இப்படி பாழடித்து விட்டோமே என்று, மரண படுக்கையில் வாழ தவறியதற்கு வயதானவர்கள் வருந்துவது போல், உகு நீர் நெஞ்சு சுட,  நம்மையெல்லாம் வருந்த செய்வார் இளையராஜா.  உண்மை தான். ராஜாவின் இசையில் தன் பாடலை கேட்க, பாரதிக்கு கொடுத்து வைக்கவில்லை.

மேடையில் பாடுவதற்கென்றே சில பாடல்கள் இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத இசையில், மெல்லிய பின்னனியில், தொண்டையிலிருந்தோ, வயிற்றிலிருந்தோ பாடாமல், வாயிலிருந்து மட்டும் பெரும்பாலான வார்த்தைகள் பாடுவது போல எளிதான ராகத்தில் இருக்கும். பெரும்பாலான மேடைப் பாடகர்களும், ஆரம்ப பாடகர்களும் இதைப்போன்ற பாடலை எடுத்து பாடி அப்பலாஸ் வாங்குவது வழக்கம். ஆனால் சில திறமைசாலி பாடகர்கள், தங்கள் திறமையை முழுதாய் காட்ட விரும்பி, இதைப் போன்ற பாடல்களை தவிர்த்து விட்டு, எப்போதும் கடினமான, தம் பிடித்து பாடக்கூடிய பாடலையே பாடுவார்கள். அவர்கள் மேடையேறும் போதே, கீழே இருப்பவர் காதைப் பொத்திக்கொள்வதும் உண்டு. உச்ச ஸ்துதி என்பதற்கு உச்சக்கட்ட சத்தம் என்று பொருள் கொண்டு காட்டு கத்து கத்துவார்கள். "எட்டுக்கட்டையில பாடுவேண்ணு" பெருமை வேற. நல்ல பாடகர்கள், பெரும்பாலும் மேடையில் உணர்வுப்பூர்வமான பாடல்களை பாட தவிர்த்து விடுவார்கள். முக்கிய காரணம், அந்த பாடலுக்கு முன்னே சொல்லும் அனௌன்ஸ்மென்ட்.

"இப்போது வளசரவாக்கத்து இளையராஜா, கான சக்கரவர்த்தி, வட சென்னையின் எஸ்.பி.பி...ஸொ அண்ட் ஸோ படத்திலிருந்து உங்களை அழ வைக்க, ஆனந்த மழையில் நனைய வைக்க..."  ,

"ய்ப்பா...டேய்...போதும்பா பில்ட்-அப்பு பாட்டுப் பாடுங்கப்பா"ன்னு

பின் சீட்டு ஆடியன்ஸ் சவுண்டு விட்டதற்கு பின்னால், ஒரு அம்மனா மூஞ்சி வந்து ஸ்பீக்கர் அதிரும் படி, ஹரிஹரன் பாடிய பாடலை பாடுவார்.."உயிரே....உயிரே.... வந்து என்னோடு கலந்து விடு.... உறவே... உறவே... வந்து என்னோடு நிறைந்து விடு, காஆஆ...தல்..." அவ்வளவு தான்.. அந்த காதல் வார்த்தையை இழுக்கும் போதே அவர் தொண்டை இளிக்கத் தொடங்கி விடும்.. தேவர்மகன் ரேவதி போல்..."இஞ்சி... இஞ்சி... வெறும் காத்து தாங்க வருது" ரேஞ்சுக்கு இளித்த பின், தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாட தொடங்குவார். "இந்த பாட்டை இப்படி கொள்றானே" என்று அந்த பாடலை ரொம்ப ரசித்த ஒரு ஃபிகர் முன் சீட்டில் அழும். அதை தப்பாக புரிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் கத்தி பாடுவார். மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்க கூடாது என்ற கதையில், எப்பவெல்லாம் மருந்து தொடுகிறானோ அப்போது குரங்கு ஞாபகம் வருவது போல்... ஹரிஹரனின் இந்த உயிரே உயிரே பாடலுக்கு எனக்கு வாய்த்த குரங்கு ---அந்த பாடகன். கஷ்டம். அன்றைக்கு தான் முடிவு பண்ணினேன். இனிமேல் தப்பி தவறிக்கூட உச்ச ஸ்துதி பாடல்களை பாடவே கூடாது. யார் தூக்கத்தையும் கெடுக்க கூடாதென்றும், எந்த பாடகரையும், பாடலையும் படுகொலை செய்யக் கூடாதென்றும் உறுதி கொண்டுவிட்டேன்.

யப்பா...நாராசம்..

மேடை பாடல்களில் என்னை மகிழ்வித்த பல நண்பர்கள், பல நல்ல பாடல்களை பாடியிருக்கிறார்கள். "இல்லையென்று சொல்ல ஒரு கனம் போதும், இல்லையென்ற சொல்லை... தாங்குவதென்றால்,,, இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்" இந்த வரி வரை மெல்லமாக ஹஸ்கி வாய்சில் பாடி விட்டு... "சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என்று நண்பன் ரமேஷ் ஹைப் பிட்ச் எடுக்கும் போது கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்யும். பத்தாம் வகுப்பு முடித்து, விடுதியை விட்டு பிரியும் முன், கடைசி நாள் ட்யூஷன் க்ளாசில், எல்லோரும் ஒவ்வொரு பாடலாக பாடி கொண்டிருக்க, மின்சாரம் தடைப்பட்டது. இருந்தும் பாட்டு கச்சேரி தொடர்ந்து கொண்டே இருந்தது. எல்லோரும் வற்புறுத்த, அமுதா மிஸ் "நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது என் கண்ணே" என்று பாடியவுடன், உணர்ச்சிவசப்பட்டு, தேம்பி அழாத குறையாக கண்ணில் நீர் வந்தது. பாடும் ஆஃபிஸ் என்று விஜய் டீவியில் ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு அலுவலகமும் தங்கள் நிலையத்தில் உள்ள திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி. நான் அதை பார்த்ததில்லை என்றாலும், நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் யூ-ட்யூபில் ஒரு பாடலை பார்த்தேன். இன்ஃபோசிஸ் கம்பனியிலிருந்து திவ்யா என்பவர், இறுதி சுற்றில் பாடிய ஹே ராம் பட பாடல். "இசையில் தொடங்க்குதம்மா... விரக நாடகமே"... திரைப்படத்தில் ஆண்குரலில் பாடப்பட்ட பாடலை, அச்சு பிசகாமல், அனுபவித்து அந்த பெண் பாடி முடிக்க... அனைத்து நடுவர்களும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர். நடுவராக வந்த க்ரிஷ்...திஸ் ஈஸ் சிங்கிங்க் - பாடறதுன்னா இது தான் " என்று சொல்லும் போது நானே பாடி என்னை புகழ்ந்தது போல் பாவித்தேன். அடக்கமுடியாமல் கண்களில் நீர் வந்தது. சூப்பர் சிங்கர் (எந்த ஸீசன் என ஞாபகமில்லை) போட்டியில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் "ஆராமலே..." பாடலை ஒருவர் பாடுகிறார். அவர் பெயர் என்ன என்று கூட தெரியாது... காமிரா க்லோசப்-பில் அவரை காட்ட, அவரின் கழுத்து நரம்புகள் புடைத்து வெடித்து விடுவது போல் இருக்க..."ஆராமலே..." என்னும் போது அர்த்தம் புரியாமல், இசையின் உணர்வால் மட்டுமே கண்களில் நீர் கசிந்தது. இசையில் இறைவனை காண்பதும் அப்படி தானோ?

பலமுறை பாடல்களின் வரிகளால் தான் ஒரு பாடல் நமக்கு பிடித்து போகிறது என்று நினைத்திருந்தேன். ஹிந்தி தெரியாத நான், ஹிந்தி பாடல்களை கேட்டு ரசிப்பதற்கும், உணர்ச்சி வசப்படுவதற்கும் வாய்ப்பே இல்லை என நினைத்திருந்தேன். ஆமிர்கானின் தில் சாத்தே ஹே என்ற படத்தில் "தனுஹாயி"... பாடல், அமிதாப்-பின் நிஷப்த் படத்தில் வரும் "ரோசானா ரியே" பாடல், 3 இடியட்ஸில் வரும் - "ஒன் மொர் சான்ஸ்" பாடல்ன்னு பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் கண்ணில் நீர் வரவழைத்தன. ரசிக்கும் பாடல் என்றாலே அழுவது தானோ என்ற ரேஞ்சுக்கு பெரும்பாலான என் விருப்பப் பாடல்கள் கண்களில் நீர் வரவழைப்பதை நானே பார்த்து நகைத்திருக்கிறேன்.

2006க்கான சிறந்த பாடலாசிரியர் விருது. தாமரை என்ற பெண் கவிஞர் வாங்கினார். விகடனின் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் அவர் எழுதிய ஒரு கவிதை. பரிந்துரைத்து அவர் நல்ல கவிஞராக வருவார் என எழுத்தாளர் சுஜாதா அவரை வாழ்த்திய போது, கவிதை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை, சினிமாவுக்கு பாட்டு எழுதுவது தான் தன் லட்சியம் என்று பட்டென உடைத்திருக்கிறார். அதில் தான் வருமாணம் என்பதால் இல்லை. பாடல் என்பதில் ஒரு அழகிய கவிதை, இசை என்னும் கிரீடம் சூட்டி, ராகமாக கேட்ப்பவர் மனதில் குடிக்கொண்டுவிடும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தார். கவிதையாக எழுதியிருந்தாலோ, அல்ல என் தோழி எனக்கு அந்த பாடலை அறிமுகம் செய்து வைக்காமல் போயிருந்தாலோ அந்த அழகிய பாடலை தவற விட்டிருப்பேன்.

நீ சூரியன்
நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன்
நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன்
நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிறேன்

நீ சூரியன்
நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்.

தவமின்றி கிடைத்த வரமே...
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

என்ற அன்பு பட பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என எனக்கே தெரியவில்லை. அவ்வளவு பிடிக்கும். இசை சூடி வரும் கவிதைக்கு என் இலக்கணம் இந்த பாடல் தான்.

சில பாடல்கள் நாம் கேட்டு ரசிக்காமல் விட்டிருப்போம். சில நண்பர்கள் அந்த பாடலை பித்து பிடித்து ரசிக்க, ரசிக்க, அப்படி அந்த பாடலில் என்ன தான் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்போம். ஏதோ ஒரு ஸ்ருதியில், ஏதோ ஒரு லயத்தில், ஏதோ ஒரு தந்தியின் மீட்டலில், நம் நண்பனை பித்து பிடிக்க வைத்த அந்த அலைவரிசையை நாமும் உண்ர்வோம். நமக்கும் அந்த பாடல் பிடித்த பாடலாகிவிடுகிறது. நம்மையும் பித்து பிடிக்க வைத்து விடுகிறது. நம் நண்பன் அந்த பாடலின் கடலில் இருந்து கறையேறி அடுத்த பாடலுக்கு தாவியிருப்பான். நம்மால் அந்த பாடலை விட்டு வெளிவரவே முடியாது. அப்படி என்னை ஆட்கொண்ட பாடல் தான் மோக முள் படத்தில் வரும் "சொல்லாயோ வாய்திறந்து" பாடல். வீதியில் நடந்து கொண்டிருக்கும் போது எத்தேச்சையாக அந்த பாடலை கேட்டு விட்டால், இடம், செயல் எல்லாம் மறந்து அங்கேயே நின்று விடுவேன். அறிதாக கேட்கும் அந்த பாடல் முடியும் வரை அங்கே இங்கே நகர கூட முடியாது. காளை ராஜா என்ற நண்பர் அந்த பாடலை சிலாகித்து சொல்லும் வரை அந்த பாடலை கண்டுக்கொண்டது கூட கிடையாது. மோகமுள் திரைப்படம் பார்த்தது, தி.ஜா விற்கு வாசகனாகி, பிடித்த நாவல்களில் மரப்பசு ஒன்றாகி போனதெல்லாவற்றிர்க்கும் பின்னால் இந்த "சொல்லாயோ வாய் திறந்து" ஒரு பாடல் தான். பெண்ணின் விரகத்தை இதை விட அழகாக இறைவனால், ஏன் இளையராஜாவால் கூட இன்னொரு முறை இசைக்க முடியாது.

ஆகாய சூரியன்
மேற்கினில் சாய
ஏகாந்த வேளையில்
மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேணி வாட
தாமதம் இனி ஏனோ இருமேணி கூட
அந்தி வரும்
தென்றல் சுடும்

அதில் நடித்த கதா நாயகியின் பேர் கூட தெரியாது...பாடல் கேட்க்கும் போதெல்லாம் அமுதா மிஸ்-ஸாக தான் அவர் தெரிவார். தினைமயக்கத்தில் நட்பை காதலென்று கருதி, வயது படுத்தும் பாட்டை, தோழியும், அம்மாவுமான அமுதா மிஸ்-ஸிடம் அவள் அழகு படுத்தும் பாடு என்னை தூங்கவிடாது செய்கிறது என்பேன். இந்த பாடலில் வரும், தூண்டில் புழுவாய் நெலிந்ததை சொல்வேன். "இந்த சின்ன சின்ன விஷியங்களில் சந்தோஷம் கண்டு அடங்கி விடுபவனா என் பாபு... இசையில் பல சாம்ராஜ்யிங்களை சாதிக்க பிறந்தவன்" என்று அந்த நாயகி சொன்ன வசனங்கள் தான், பதின்வயதில், பருவகோளாரில் பாதை தவற நினைத்த எனக்கு புத்திமதியாக அமுதா மிஸ் சொன்னார்கள். அழகில், உடலில் காதல் இல்லை... அதையெல்லாம் தாண்டி, உண்மையான அன்பில் காதல் இருப்பதை உணரச்செய்து காதலின் பால் காதல் கொள்ள செய்தார்கள். இருப்பினும், தனித்திருக்கும் பல நாட்களில், மோகமுள் பாயும் போது, இந்த பாடல் உள்ளதை உள்ளபடி உறைப்பதாக தோன்றும். "அழகு மலராட" என்ற வைதேகி காத்திருந்தாள் பட பாடலும், "பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" என்ற பாடலும் தான், பெண்களின் பார்வை வழியே, விரக தாபத்தின் தனிமையின் கொடுமையை பறைசாற்றிய பாடல்களாக கருதினேன். "சொல்லாயோ" கேட்ட போது, அந்த வலியை ஆண் ஆன என்னாலும் உணரமுடிந்தது. விரகத்தில் தவிப்பதில் ஆண் என்ன, பெண் என்ன? எல்லோருக்கும் ஒன்றே பசி.

திருமணத்திற்கு பின் வேறு ஒரு பெண் மீது ஆசை வரலாமா? ஆசையே வந்தாலும் அது காதலாக மாறுமா? அப்படி ஒருவேளை காதலாக இருக்கும் பட்ஷத்தில் இந்த சமூகம் அதை ஒப்புக்கொள்ளுமா?  அப்படி ஒரு கால கட்டம் என் வாழ்விலும் வந்தது. (என்னை நல்லவனாக நினைப்பவர்கள் இதை வேறு ஒரு நண்பனுக்கு நடந்ததாக பாவித்துக் கொள்ளலாம்.). மனதில் எப்போதும் அமைதியின்றி செய்வது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டே இருந்த நாட்கள். ஒருப்பக்கம் லவ் டுடே விஜய் மாதிரி, காதல் ஒரு முறை தான் பூக்கும், உதிர்ந்து விட்டால் மறுபடியும் பூக்காதுன்னு ஒரு மனசு வசனம் பேசியது. மனசென்ன மிட்டாயா? ஒருவரிடம் கொடுத்தால் இன்னொருவரிடம் கொடுக்காமல் இருக்கன்னு இன்னொரு மனசு பிடிவாதம் பிடிக்கிறது. தினம் தினம் மனசுக்குள் ரணம்.. நம்ம ஊர் சட்ட திட்டப்படி, திருமணமாகதவர்களே தங்கள் காதலை பெண்ணிடம் சொல்ல அனுமதியில்லை. அந்த பெண்ணிடம் இதை எப்படி சொல்வது? அன்பு மட்டும் தான் காதல் என்றால் ஒரு நாய்குட்டி போதும், காமம் மட்டும் தான் காதல் என்றால் ஒரு வேசி போதும். இரண்டும் கலந்தது தான் காதல்ன்னு வைரமுத்து வேற வார்த்தைகளில் தபேலா வாசிக்கிறார். இந்த நேரம் பார்த்தா காதல் கொண்டேன் படம் வரனும். நா. முத்துக்குமார் வரிகளா, யுவனின் இசையான்னு தெரியல, அந்த படத்தின் பாடல்களை கேட்டாலே ஒரு வித உணர்ச்சி பிழம்பானது மனசு. "தொட்டு தொட்டு பேசும் தென்றல்" பாடலுக்கு தனுஷுடன் நானும் வெறியாட்டம் போட்டு கத்த வேண்டும் என்றிருந்தது.

இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வறைமுறைகள் புரியவில்லை
இதய தேசத்தில்
இறங்கி போகையில்
இன்ப துன்பமென்று எதுவுமில்லை...

அந்த தோழியோ.என்நிலை புரிந்து, என் காதலை ஏற்று, ஒரு சிறிய எல்லை மட்டும் வகுத்துக் கொண்டு, என்னையும் அரவணைத்து தன் அன்பால் என்னை உறுக செய்தாள். , "நெஞ்சோடு கலந்திடு உறவாலே" என்று தன்னையே அர்ப்பனிக்கிறார் காதலில். போங்கடா... உலகமாவது, சமூகமாவது, சொசைட்டியாவது... என்று எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு அந்த காதலியோடு வாழ சொன்னது மனசு. அவளோ செல்வராகவன் படத்து ஹீரோயின் போல அப்படி ஒரு வெறித்தனமான, அதே சமயம் பரிசுத்தமான அன்பு. திக்குமுக்காடி, அன்பில் திலைத்த நாட்கள் அவை.

காலங்கள் ஓடும் - இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீ தான் தலை கோத வந்தால்
உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்.
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது - அடி
உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை
காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை....

அவ்வளவு தான். மனசு தெளிந்துவிட்டது. சரி தவறற்ற அந்த உலகத்தில், பெயரற்ற அந்த உறவில் சந்தோஷமாய் சஞ்சரித்தோம். அந்த கால கட்டத்தில் இளையராஜா என்றில்லை... எந்த இசையமைப்பாளர் போட்டாலும், காதல் பாடல்கள் எல்லாம் ரம்மியமாக தெரிந்தது. காதல் குருடாக இருக்கலாம். அதன் செவித்திறன் அபரிதமானது. அப்போது வந்த எந்த பாட்டானாலும், ஒரு முறை கேட்டவுடன் பற்றிக்கொண்டது மனசு. மனசு முழுக்க அந்த காதலியும், அவளோடு இருந்த அந்த இசையும் நினைத்து பார்த்தாலே ஆனந்தமாக இருக்கிறது. "ஆசை ஆசை இப்பொழுது, பேராசை இப்பொழுது...ஆசை தீரும் காலம் எப்பொழுது?" என்று ஒவ்வொரு நாளையும், நொடிக்கணக்குளில் ரசித்து வாழ்ந்த வாழ்வு. இசையை ரசிக்க பாடலோ, ராகமோ, பாடலில் உள்ள வார்த்தைகளோ தேவையேயில்லை. என்னை பொறுத்தவரை இசையை ரசிக்க கண்டிப்பாக ஒரு காதல் தேவைப்படுகிறது. காதல் இல்லாமல் போனால் வார்த்தையே இல்லாத இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்டல் இசையை ஏன் பித்து பிடித்தவனை போல் ராத்திரியில் தூக்கம் கலைத்து, அதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.. கேட்க கேட்க ஏன் அடக்க இயலாத அழுகை வர வேண்டும். அழுதாலும், மீண்டும் மீண்டும் அதே இசையை ஏன் இசைக்க செய்து ரசிக்க வேண்டும். எல்லாம் காதலால் தான். இசையால் தான். காதலும் இசையும் சேரும் வேலைகளில் தான், இல்லையென்று மறுக்கும் கடவுள், ஒருவேளை இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

சில பாடல்கள் நம் மனதில் ஒரு பட்டியலில் (ப்ளே லிஸ்ட்டில்) இருக்கும். எப்படி ஆரம்பிக்கும் என்று தெரியாது. திடீரென யாராவது நம்மை உலுக்கி, என்ன இந்த பாடலையே திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இருக்க என்று கேட்கும் வரை நாம் எத்தனை முறை அந்த பாடலை பாடினோம் என்றே கூட தெரியாது. அதே போல் யாராவது பிடித்த பாடல் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்லுவதற்காகவே சில பாடல்கள் வைத்திருப்போம். ரெண்டு லைன் ஹம்மிங் பண்ண வசதியான பாடலாய் நானும் சில பாடல் எடுத்து வைத்திருக்கிறேன். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் "பூவ எடுத்து ஒரு மால(லை) தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா" பாடல், "மேகம் கருக்குது மழைவர பாக்குது வீசியடிக்குது காத்து..மழை காத்து" பாடல்... இந்த மாதிரி கஷ்டப்படாமல் பாடக்கூடிய மெலடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். பின்னாளில் என் ரசனை விரிவடைய, எனக்கு பிடித்த பாடல் எல்லாம் பெரும்பாலும் கீரவாணி ராகத்தில் இருப்பதாகவும், அல்லது டூயட்டாக இருப்பதில் பிடித்தவை பெரும்பாலும் இன்டெர்லூட் ஆக இருப்பதுவும், இவை இரண்டுமே இளையராஜாவனின் ஸ்பெஷாலிட்டி என்றும் தெரிந்து கொண்டேன். நண்பன் ரமேஷிடம் சொல்லும் போது ஒரே கொட்டில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை இசைக்கப்படும் பாடல்கள் பெரும்பாலான பாடல்கள் பிடிக்கும் என்பேன். இப்போது வரும் பாடல்களில் அழகான பல்லவி வரும், சரணம் வரும், இடையில் பீஜியம் வரும் இடத்தில் இளையராஜா தாலாட்டு போல பீஜியம் போடுவார்... ஆனால் விஜய் ஆண்டனி...புரியாத பாஷையில் ஒரு காட்டு காட்டி, ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, தெளிய வைத்து, பின் மீண்டும் மெலடிக்கு இறங்கி விடுவார். இதுவும் ஒரு சுகம் தான்... இப்போதெல்லாம் தூங்குவதற்கு பாடல் போடுவதில்லை. ஓட்டுனர்கள் தூங்காமலிருக்க பாட்டு போடுகிறார்கள்.


இளையராஜாவின் தீவிர ரசிகர், யூ.ஸ்-ஸில் உள்ள தாசரதி என்பவர். இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் இளையராஜாவின் சினிமா பாடல்களை தன் P.Hd subject-டாக எடுத்து அவர் பாடல்களை அலசி ஆராய்கிறார். அந்த ஊர் F.M. ரேடியோ அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதையும், அவரின் நிகழ்ச்சி ஒன்றை sound cloud -டில் இருப்பதையும் இளையராஜாவின் இனைய ரசிகர்கள் புகழ, அதை தேடி பிடித்து கேட்டேன். நான்கு பாகங்களை கொண்ட அந்த தொகுப்பில் பல இடங்களில் "அட" போட வைக்கிறது அவரின் ரசிப்பு தண்மை. நவீன ஓவியங்களை புரிந்து கொள்ள அதை தெரிந்தவர் வந்து விளக்கம் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக புரியும் போது அடடே எனத் தோன்றுமே... அது போல, அவர் சொல்ல சொல்ல...இளையராஜா, மனிதரில் இருந்து, மா மனிதராகி, இறைவனாகி, அதையும் தாண்டிய இசையாய் விரிகிறார். உதாரணத்திற்கு ஒன்று... தகிடதக துமி... இந்த தாள வரிசையில் ( 7 beats) கொண்டு மிக அரிதாகவே பாடல்கள் புணையப்படும். அப்படி புணையப்பட்டாலும், பெரும்பாலும் எழுச்சி பொங்க, ஆக்ரோஷம் காண்பிக்க...போன்ற தீவிர உணர்வுகள் கொண்ட பாடல்களுக்கு தான் அந்த தாளம் பயன் படுத்தப்படுகிறது. இதை கொண்டு, மிக மெல்லிய, மனதை வருடும், மோகணமான பாடல் படைக்கிறார் இளையராஜா... தாளத்தை பின் தள்ளி, பல குரல்களின் கூட்டமைப்பில் ஹார்மனி என்னும் "chorous" குரல்களை தாளமாக்குகிறார். விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா.." என்ற இந்த பாடலில் அத்தனை புதுமைகளையும், எக்ஸ்பரிமெண்டுகளையும் செய்து வெற்றிப்பெற்றிருக்கிறார். இதைப் போல இயக்குநர் சுஹாஸினி மணிரத்தினம் ஒரு பேட்டியில், இளையராஜாவை பற்றி சொன்னதிலிருந்து, பனிவிழும் மலர்வணம் பாடல் என் பிடித்த பாடல்களின் லிஸ்டில் ஒரு படி மேலே ஏறிவிட்டது. 80 தனி இசைக்கருவிகளுக்கான நோட்ஸ் கொண்டு எழுதப்படும் இசைக் குறிப்புகள் ஒரு சிம்ஃபனி என்றும், அந்த பாடலில் 77 இசை கருவிகளை அனாயசமாக உபயோகித்ததையும், தாம் செய்வது சாதனை என்றே தெரியாமல் சாதித்த அந்த பாடலைப் பற்றி கூறினார். அதுவரை அதன் வரிகளுக்காக மட்டுமே ரசித்த அந்த பாடல், இந்த செய்தியை கேட்ட பின், தனி தனி இசைக்கருவிகளை அடையாளம் காண கேட்டு கேட்டு, இப்போது மனதோடு ஒன்றி விட்டது.

இருபது நிலவுகள் நகமெங்கும் ஓளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்...


என் நண்பர்களில் பல பேருக்கு பாடல் என்பது அதை படமாக்கிய விதத்தையும் சேர்ந்தே இருப்பது என்று எண்ணுகிறார்கள். அவர்களால் வெறுமனே பாடலை கேட்கும் போது அதை ரசிக்க முடிவதில்லை. அந்த பாடலை படமாக்கிய பின், அதை பார்த்ததற்கு பிறகு அந்த பாடல் பிடித்து விடுகிறது. பாடல்கள் கேட்பது என்பது போய் இப்போது பார்ப்பது என்பதாகிவிட்டது. தனி பாடல்களை ரசிக்க யாருமில்லை என்பதை விட, வீடியோ இல்லாமல் பாடலாக மட்டுமே பாடல்கள் வருவதே இல்லை. டி.எம்.ஸ்-ஸின் "புல்லாங்குழல் கொடுத்த
மூங்கில்களே..எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்..", "உள்ளம் உருகுதய்யா..முருகா.." போன்ற பக்தி பாடல்கள், ஏசுதாசின் "ஹரிவராஸனம்..." போன்ற பல பாடல்கள் படமாக்காமலே மனதை வருடி, கடவுளை நம்பாதவர்களையும் முனுமுனுக்க வைத்தது. இப்போது பக்தி பாடல்களும் ஏற்கனவே கேட்ட திரைப்பாடல்களின் மெட்டுகளிலேயே பாடப்பட்டு, அவற்றை கேட்கும் போது அந்த திரைப்பட காட்சியே நம் மனதில் தோன்றுகிறது. பாய்ஸ் படத்தில் ஐயப்பனுக்கு பாட்டு போடும் போது "மல மல மல மருத மல மலே ம-ருத மல" என்று மும்தாஜ் ஆடிய பாடலை மாற்றி, "மல மல மல சபரி மல, ம-லே ச-பரி மல" என்று பாட ஆரம்பிக்க.. "ஏன் அப்படியே ஒரு துண்ட கட்டிக்கிட்டு மும்தாஜ் மாதிரியே ஆடுங்களேன்" என்பார் விவேக். திரைப்பட பாடல் மெட்டில் பக்தி பாடல்கள் கேட்கும் போது அது தான் ஞாபகம் வரும். அதே படத்தில் "கன்னி சாமி புதுசா மலையேறும் நாளப்பா... கருப்பு சட்டை போட்ட ஆத்திகன் நானப்பா..." பாடல், ஏ.ஆர்-ரின் தனி திறனுக்கு ஒரு சோறு பதம். எந்த விளையாட்டு மைதானத்திலும் தன்னால் சென்சுரி அடிக்கமுடியும் என்று நிரூபித்த ஒரு நிமிட பிட்டு சாங் அது.


ஒருமுறை மடி கணினியில் தமிழில் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது அப்பாவுக்கு புது விஷியமாக இருந்தது. அதில் ஈர்க்கப்பட்டு நான் எழுதியதை வாசித்தார். அதில் சமீப படத்தில் வந்த ஒரு பாடலை மேற்கோள் காட்டி, குத்துப்பாடல்களிலும் கருத்து சொல்ல முடியும் என்றும், இப்போதெல்லாம், ஹீரோ இன்ட்ரோ பாடல்கள் பெரும்பாலும் இப்படி வருவதையும், கவிஞர்கள், அதை அழகாக பயன்படுத்துவதையும் எழுதியிருந்தேன்.

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கு கிடைக்கனும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான்
ஆண்டவனுக்கு படைக்கனும்

வரட்டி தட்டும் செவுத்துல
வேட்ப்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு
கருத்து போச்சு நகமடா..

என்ற வரிகளை சிலாகித்து படித்த அப்பா.. அது எந்த பாட்டு என்று கேட்டார். "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட" என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடி காட்டினேன். அந்த காலத்து பாட்டு போல இந்த காலத்து பாட்டு இல்லை என்று சொல்வதெல்லாம் சும்மா டா... உன்ன மாதிரி கவனிச்சு கேட்டா எல்லா பாட்டும் பிடிக்கும்... இதோ இந்த பாட்டா எத்தனை தடவை கேட்டிருப்பேன், இப்படி ஒரு மெசேஜ் அந்த பாட்டில இருக்கிறது தெரியவே தெரியாது. "அழகு என்பது பார்ப்பவர் கண்களில்ன்னு சும்மாவா சொன்னாங்க" என்றார். கொலவெறி பாடல்கள் பட்டி தொட்டி முதல் எல்லா இடங்களிலும் ஹிட் ஆனத்ற்கு காரணம், அதை கேட்டவர்கள் சிலாகித்து, அடுத்தவர்களை கேட்க சொன்னது தானே காரணம். அடுத்தவர்கள் சொல்லி அதன் பின் கேட்கும் போது, நாம் பாடலை கேட்பது மட்டுமில்லை, ரசிக்கவும் செய்கிறோம்.

ரசிக்கின்ற எதுவும் அழகாகி விடுகிறது. நண்பர்களின் பரிந்துரையில் அப்படி எண்ணற்ற பாடல்களை ரசித்திருக்கிறேன். மூச்சு காற்றுப்போல் இசையோடு வாழ்க்கை நடத்தும் நிறைய நண்பர்களும் தெரியும். இசையை மட்டுமே உண்டு வாழும் சாதகப்பறவைகளும் அதில் அடக்கம். அவர்களை வாழ்விக்கும் இசையை, அந்த அலையை அவர்கள் பகிர்ந்த பாடல்களை எழுத ஒரு தனி புத்தகமே எழுதலாம். காதலனை சேருவோமோ இல்லை உயிரை விட்டுவிடலாமோ என்று தடுமாற்றத்தில் இருந்த அந்த தோழியின் கைப்பேசியில், ஒலித்துக் கொண்டிருந்த பாடலை, அவளின் ஒரு காது ஹெட்ஃபொனை வாங்கி என் காதில் வைக்க, அலைப்பாயுதே படத்தில் வரும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது. அவளிடமே ஹெட்ஃபோனை கொடுத்து விட்டு நடந்தேன்...மனதில் பாடல் விடாமல் ஓடிக்கொண்டிருந்தது...

புல்லாங்குழலே பூங்க்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி...
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
என்றோ என்றோ இறந்திருப்பேன்...

உண்மை தான். உள்ளத்து காயங்களுக்கு இசையை தவிற மருந்து ஏது? இக்கட்டான நேரங்களில், மூச்சு முட்டும் சோகத்தில், காற்று கூட நெஞ்சடைக்க செய்வதாய் தோன்றும் நேரத்தில், இசை தானே சுவாசம். இசையை கேட்டது போதும்.. இனி ரசிப்போம், சுவாசிப்போம். விரும்பி கேட்ப்போம்.

No comments:

Post a Comment